கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில், உழவர்களுக்கான பாசன நீர் மேலாண்மை விழிப்புணர்வு பயிற்சி நாகர்கோவில், ரோட்டரி கம்யூனிட்டி ஹாலில் நடைபெற்றது.இப்பயிற்சியில், கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தெரிவித்ததாவது:-
விழிப்புணர்வு பயிற்சி
பருவநிலை மாற்றத்தால் தமிழகம், வறட்சி, வெள்ளம் போன்ற பாதிப்புகளால் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதில், உழவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் சராசரி ஆண்டு மழையளவு 920 மி.மீ. கன்னியாகுமரி மாவட்ட ஆண்டு சராசரி மழையளவு 1443 மி.மீ.எனவே, தற்போது, தமிழ்நாடு அரசு குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு கண்மாய், ஏரி, குளங்களை தூர்வாரி நீரை சேமிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தத் தருணத்தில் திருச்சி பாசன மேலாண்மை பயிற்சி மையம் உழவர்களுக்கு பாசன நீர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு பயிற்சியை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தின் தட்பவெட்ப நிலைகளை ஆராய்ந்து, அவற்றிற்கேற்றார்போல், பயிற்சி வகுப்புகள் நடத்தி வருவது பாராட்டுக்குரியது. தற்போது, நமது மாவட்டத்திற்கு இப்பயிற்சியை வழங்க வருகை தந்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு, நமது மாவட்டத்தில் குறைவான அளவு மழை பெய்துள்ளதால், பாசனத்திற்கு தேவையான நீர் குறைவாக இருந்ததால், கடந்த ஆண்டு விவசாய மகசூல் 30 சதவீதம் குறைவாக இருந்தது. இந்த ஆண்டு, போதிய அளவு மழை பெய்துள்ளதால், கிடைக்கும் மழை நீரை சேமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் பண்ணைக்குட்டைகளை அமைத்து, மழைநீரை சேமிக்க வேண்டும். குறைந்த தண்ணீரை பயன்படுத்தி, அதிக மகசூல் தரக்கூடிய சொட்டுநீர் பாசனத்தை விவசாயிகள் கடைபிடித்து, வேளாண்மை உற்பத்தியில் அதிக மகசூல் பெற்று, வருவாய் ஈட்டும்படி, விவாசய பெருமக்களை கேட்டுக்கொண்டார்.இப்பயிற்சியில், தலைமை இயக்குநர் (பாசன மேலாண்மை பயிற்சி நிலையம், திருச்சி) பொறி கே.எஸ். அப்துல் ரஷீது, பேராசிரியர் (வேளாண்மைப்பொறியியல்) பாசன மேலாண்மை பயிற்சி நிலையம், திருச்சி) பொறி எஸ். கணேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) எம். நிஜாமுதீன், இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) பாண்டியன், துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) எம். அசோக் மேக்ரின், வேளாண்மை உதவி செயற்பொறியாளர்கள் ஆர்.செல்வரெத்தினம், டி.இராதாகிருஷ்ணன், தோவாளை, வேளாண்மை அறிவியல் மையம் முனைவர் கே.கவிதா, வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.