ஓகி புயல் சேத மலைப்பகுதி குக்கிராமங்களில் முழுவீச்சில் மின் சீரமைப்பு பணிகள் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தகவல்

புதன்கிழமை, 13 டிசம்பர் 2017      கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட ஓகி புயலால் மாவட்டத்தின்  பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் சேதமடைந்து மின்சார விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மின்சார விநியோக சீரமைப்பு பணிகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.

சீரமைப்பு பணிகள்

மின் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள பிற மாவட்டங்களிலிருந்து வருகை தந்துள்ள 7,200 மின் பணியாளர்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த  1,200 மின்பணியாளர்கள் என மொத்தம் 8,400 மின்பணியாளர்களும், மின்பகிர்மானம் மற்றும் மின் தொடரமைப்பு இயக்குநர்கள் இருவர் மற்றும் 17 மேற்பார்வை பொறியாளர்களின்  தலைமையில் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு, புயலால் சேதமடைந்த 13,469 மின்கம்பங்களில் 13264 மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.  மேலும் சேதமடைந்த 802 கி.மீ நீளமுள்ள மின்கம்பிகளில் 795 கி.மீ. நீளமுள்ள மின்கம்பிகள் சீரமைக்கப்பட்டன. தீவிர நடவடிக்கைகளால்  மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிப்பகுதிகள் மற்றும் 55 பேரூராட்சிகளிலும் 100 சதவீதம் மின்சீரமைப்பு பணிகள் நிறைவுற்றுள்ளது. மேலும், 95 ஊராட்சிகளில் 90 ஊராட்சிகளுக்கு முழுவதுமாக மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 ஊராட்சிகளில் உள்ள மலை பகுதியில் மின் பாதை முழுவதும் மிகுந்த சேதமடைந்துள்ளதால், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 1200 மின் பணியாளர்களுடன் இம்மாவட்ட மின்பணியாளர்கள் இணைந்து மின் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகளை விரைவுபடுத்த மின்துறை உயர் அலுவலர்கள் அப்பகுதிகளில் முகாமிட்டு பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகிறார்கள் என கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து