முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டின் கறவை மாட்டினங்கள்

வெள்ளிக்கிழமை, 15 டிசம்பர் 2017      வேளாண் பூமி
Image Unavailable

Source: provided

காங்கேயம்  :  மிகச்சிறந்த உழவு இனம், பூர்வீகம்: காங்கேயம் வட்டம், திருப்பூர் மாவட்டம்.

நடுத்தர உடலமைப்பு, காளைகள் பொதுவாக சாம்பல் நிறத்திலும், தலை, கழுத்து, திமில், தோள்பட்டை மற்றும் உடலின் பக்கவாட்டில் கருஞ்சாம்பல் முதல் கருப்பு நிறத்திட்டுக்களும் காணப்படும். பசுக்கள் சாம்பல் அல்லது வெள்ளை நிறம்.

கொம்புகள் நீண்டு வெளிப்புறமாகவும், பின்னோக்கியும், உள்நோக்கியும் வளைந்து முழு வட்டவடிவமாக அல்லது நீள் வட்ட வடிவமாக இருக்கும்.

எருதுகள் அவற்றின் எடையைப் போல் நான்கு மடங்கு எடையை 10 முதல் 20 கி.மீ. தூரத்திற்கு ஓய்வில்லாமல் தொடர்ந்து இழுக்கக் கூடியவை.

உம்பளாச்சேரி  :  சிறந்த உழவு இனம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு ஏற்ற இனம்,

நடுத்தர உடலமைப்பு, காளைகள் கருஞ் சாம்பல் நிறம். பசுக்கள் மற்றும் எருதுகள் சாம்பல் நிறத்துடன் இருக்கும்.

நெற்றியில் வெள்ளை நிற நட்சத்திர அமைப்பு. குட்டையான, கூர்மையான, நடுத்தர தடிமன் கொண்ட கொம்புகள், கால்கள் குட்டையாகவும், வெள்ளை நிற காலுறை அணிந்த தோற்றத்துடன் காணப்படும்.

எருதுகள் விவசாய வேலைகளுக்கும் மற்றும் வண்டி இழுவைக்கும் உபயோகப்படுத்தப்படுகின்றன. தொடர்ந்து 6 முதல் 7 மணி நேரம் ஓய்வில்லாமல் உழைக்கும் திறன் படைத்தவை.

பர்கூர் :  மலைப்பாங்கான பர்கூர் மலைப்பகுதிக்கேற்ற சிறிய உடலமைப்பைக் கொண்ட உழவு இனம். பொதுவாக சிவப்பு நிறம். இளஞ்சிவப்பு முதல் கருஞ் சிவப்பு உடலில் வெண்மைத் திட்டுக்கள் காணப்படும்.

குறைந்த பராமரிப்பு செலவு, கொம்புகள் பின்னோக்கியும், மேல்நோக்கியும் வளர்ந்திருக்கும். கடுமையான தட்பவெப்ப நிலையில் குறைந்த ஊட்டச்சத்துடன், குறைந்த இறப்பு விகிதத்துடன் நீண்ட நாள் வாழும் திறன் படைத்தவை.

புலிக்குளம்  :  பூர்வீகம் : சிவங்கை மாவட்டத்திலுள்ள புலிக்குளம் எனும் கிராமம்.
காளைகள் தீவிர பயிற்சிக்குப் பிறகு சீறிப் பாயும் காளைகளாக ஜல்லிக் கட்டு வீரவிளையாட்டிற்கு உபயோகப்படுத்தப்படுகின்றன.

காங்கேயம் மாட்டினத்தை ஒத்தவை, ஆனால் சிறிய உடலமைப்பு, வலிமை யான மற்றும் சுறுசுறுப்பான மாட்டினம். குட்டையான கால்களையும், வலிமையான குளம்புகளையும் உடையவை.

காளைகள் கருஞ்சாம்பல் நிறத்துடனும், பசுக்கள் சாம்பல் நிறத்துடனும் காணப்படும். உடலில் சிவப்பு அல்லது பழுப்பு நிறத்திட்டுக்கள் ஆங்காங்கே காணப்படுவதால் ‘செந்தாமரை’ என்று அழைக்கப்படுகின்றது.

கொம்புகள் பின்னோக்கியும், வெளிப்புறமாகவும், உள்நோக்கியும் வளைந்து இருக்கும். எருதுகள் விவசாய வேலைகளுக்கும், வண்டி இழுப்பதற்கும், பந்தயத் திற்கும் ஏற்றவை.

 

ஆலம்பாடி  : உழவு இனம். பூர்வீகம் : தருமபுரி வட்டத்திலுள்ள ஆலம்பாடி எனும் ஊர். பொதுவாக சாம்பல் அல்லது இளமஞ்சள் நிறம். தலையின் மேல் நெருக்க மாக அமைந்த கொம்புகள் வெளிப்புறமாகவும், பின்புறமாகவும் மற்றும் முன்புற மாகவும் வளைந்திருக்கும்.


வருடத்தின் பெரும்பாலான நாட்களில் காட்டிலேயே வசிக்கும். மாடுகள் கட்டப்படுவதில்லை. மேய்ச்சலிலும், உலர்ந்த வைக்கோலையும் உண்டு வாழும் தன்மையுடையவை.
எருதுகள் விவசாய வேலைகளுக்கும், வண்டி இழுப்பதற்கும் ஏற்றவை.

தோடா :  நீலகிரி மலைப்பகுதியில் காணப்படும் தனித்தன்மை வாய்ந்த எருமையினம். முரட்டுத்தனமான, பழக்கத்திற்குட்படாத எருமையினம். 

நடுத்தர உடலமைப்பு, சாம்பல் நிறம் அல்லது வெளிர் மஞ்சள் நிறம். கழுத்துப்பகுதியில் இரண்டு வெண்ணிறப்பட்டைகள் காணப்படும். கொம்புகள் மிக நீளமான பிறை வடிவமுடையவை. சராசரி பால் அளவு 2.53 கிலோ (அதிக பட்சமாக 6.65 கிலோ) : 8.28 சதவீதம் கொழுப்புச்சத்து.

சிறப்புத் தன்மைகள்  : பாலில் அதிக கொழுப்பு அளவு, மடிநோய் எதிர்ப்புத் திறன், குறைந்த கன்று ஈனும் இடைவெளி, நீண்ட நாள் வாழும் திறன் மற்றும் உடல் வலிமை.

தொகுப்பு : ஜெயந்தி, ப.ரவி மற்றும் மருத்துவர் ஸ்ரீபாலாஜி - தொடர்புக்கு : கால்நடை மருத்துவ பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், சேலம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து