அமைந்தகரையில் செல்போன் திருடனை பிடிக்க முயன்ற உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து

திங்கட்கிழமை, 18 டிசம்பர் 2017      சென்னை

செல்போன் திருடனை பிடிக்க சென்ற இடத்தில் சென்னை அமைந்தகரை காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசனுக்கு கத்திக்குத்து விழுந்தது . தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்ட இளைஞரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் திருட்டு, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை கண்காணிக்க தொடர்ந்து சென்னை முழுதும் இரவு நேரங்களில் வாகன சோதனை நடந்து வருகிறது. அமைந்தகரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புல்லா ரெட்டி அவென்யூ என்ற இடத்தில் நேற்று முன்தீனம் இரவு 1.00 மணியளவில் போலீஸார் வாகன தணிக்கை செய்துகொண்டிருந்தனர்.

காயங்களுடன்

அப்போது ஓர் இளைஞர் ஹோண்டா டியோஇருசக்கர வாகனத்தில் வந்தார், அவரிடம் போலீஸார் வாகனத்தை நிறுத்தச்சொன்னார்கள். ஆனால் அவர் தப்பிக்க பார்த்ததும் உதவி ஆய்வாளர் சீனிவாசன் அவரை பிடிக்க முயன்றார். இதையடுத்து தான் ஓட்டிவந்த வண்டியை கீழே போட்டு விட்டு அந்த இளைஞர் ஓடியுள்ளார். அவரை உதவி ஆய்வாளர் சீனிவாசன் துரத்திப் பிடித்தார். அப்போது அந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த பட்டன் கத்தியால் சீனிவாசனின் இடது பக்க மார்பு பகுதி, முதுகு மற்றும் வலது பக்க கையில் குத்தியுள்ளார். கத்தி குத்துப்பட்ட உதவி ஆய்வாளர் சீனிவாசன் சத்தம் போடவே அங்கு வாகன தணிக்கையில் இருந்த தலைமைக் காவலர் பன்னீர் செல்வம், மூர்த்தி, காவலர் வினோத் ஆகியோர் அந்த இளைஞரை மடக்கிப்பிடிக்க முற்பட்டனர்.

இதனால் பயந்துபோன அந்த இளைஞர் தன்னைத்தானே கழுத்தில் குத்திக்கொண்டார். உடனடியாக அவரிடமிருந்து கத்தியை பறித்த போலீஸார், இருவரையும் கீழ்பாக்கம் அரசு பொதுமருத்துவமனையில் அனுமதித்தனர். கழுத்தில் கத்தியால் குத்திக் கொண்டதால் மூச்சுவிட சிரமப்பட்ட அந்த இளைஞர் மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டார்.

கத்திக்குத்து காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட உதவி ஆய்வாளர் சீனிவாசன் மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய இளைஞர் பெயர் அஜித் என தெரியவந்துள்ளது. இவர் செயின் பறிப்பு, செல்போன் பறிப்புகளில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. கொடூரமான குற்றவாளிகள் கத்தியுடனும், ஆயுதத்துடனும் திரிவதும் போலீஸாரையே தாக்க முயல்வதும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து