முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்நடைக்களுக்கான முழு கலப்புத் தீவனம் தயாரிக்கும் முறைகள்

வெள்ளிக்கிழமை, 22 டிசம்பர் 2017      வேளாண் பூமி
Image Unavailable

Source: provided

மாடுகளின் உடல் நலத்திற்கும், முழு பால் உற்பத்தியை பெறுவதற்கும் கொடுக்கப்படும் தீவனம் தரமானதாகவும், சமச்சீரானதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக மாடுகளுக்கான சமச்சீர் தீவனமென்பது உலர் தீவனம், பசுந்தீவனம் மற்றும் அடர்தீவனம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். தற்போதைய தீவன மேலாண்மையில் பெரும்பாலும் இவ்வகைப் தீவனங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி யாவே மாடுகளுக்கு அளிக்கப்படுகிறது. மேலும் மாடுகள், மேய்ச்சலுக்கும் அனுப்பப்படுகின்றன.

அவ்வாறு தீவனங்களைத் தனித்தனியாக கொடுப்பதற்குப் பதிலாக அனைத் தையும் ஒன்றாக கலந்து முழு கலப்புத் தீவனமாக மாடுகளுக்கு கொடுக்கலாம். இந்த தீவன கலவையை சரியான அளவிலும், விகிதத்திலும் தயாரித்து அளிக்கும் போது ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டையும், மிகுதியையும் தவிர்க்க இயலும். எனவே, மாடுகளுக்கு முழுகலப்பு தீவனம் அனிப்பது என்பது ஒரு பயனுள்ள இலாபகரமான முறையாகும்.

முழு கலப்புத் தீவனம் என்றால் என்ன? முழு கலப்புத் தீவனம் (டி.எம்.ஆர். வுழவயட ஆiஒநன சுயவழைn) என்பது உலர் தீவனம் மற்றும் பசுந்தீவனத்துடன் அடர் தீவனத்தையும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் ஒன்றாக சேர்த்து தயாரிக்கப்படும் சமச்சீர் தீவனக் கலவையாகும். முழு கலப்புத் தீவனம், மாடுகள் ஒவ்வொரு கவளம் உட்கொள்ளும்போதும் எல்லா ஊட்டச்சத்துகளும் இருப்பதை அதிகபட்சம் உறுதி செய்கிறது.

முழு கலப்புத் தீவனத்தின் சிறப்புகள் என்ன?

மாடுகள் உண்ணும் ஒவ்வொரு கவள தீவனமும் உலர், பசுந்தீவனம், அடர் தீவனத்துடன் சீராக கலந்த ஓர் கலவையாகையால் அசையூண் வயிற்றில் தீவனச் செரிமானம் அதிகமாகிறது.

உலர் தீவனத்தையும் அடர் தீவனத்தையும் தனித்தனியாகக் கொடுக்கும் போது அசையூண் வயிற்றில் அமில காரத்தன்மை மாறுபடுகின்றது. ஆனால் முழு கலப்புத் தீவனம் கொடுக்கும்போது மாடுகளின் அசையூண் வயிற்றில் அமில காரத்தன்மை நாள் முழுவதும் சீராக நிலைப்படுத்தப்படுகிறது.

சீரான புரதமும் மாவுச்சத்தும் நார்ச்சத்துடன் அசையூண் வயிற்றில் நுண்ணுயிரிகளுக்கு ஒருசேர கிடைப்பதால் முன் இரைப்பை நொதித்தல் மேம்படுத்தப்பட்டு பசுக்களின் உற்பத்தி திறன், பாலின் தரம், உடல் நலன் சிறப்படைகிறது.

முழு கலப்பு தீவனத்தை கொடுக்கும்பேது மாடுகளுக்கு தீவனம் உட்கொண்ட உணர்வு திருப்திகரமாக இருக்கிறது. இது மேலும் தீவன எடுப்பைத் தூண்டி, பால் உற்பத்தி அதிகரிக்க வழிவகுக்கிறது.

முழு கலப்பு தீவனத்தை தயாரிப்பது எப்படி? மாடுகளில் உடல் எடை, உடற்பருவம் (சினைக் காலம், உடல் வளர்ச்சி) மற்றும் பால் உற்பத்தியைப் பொருத்து உலர், பசுந்தீவனம், அடர்தீவனம் கலப்பு விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது. இத்தீவன பொருட்களின் எடை உலர்ந்த எடையில் (நீர்சத்து முழுவதுமாக நீக்கப்பட்ட நிலையில்) கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. உதாரணமாக ஒரு கிலோ உலர்நிலை எடைக்கு நிகராக 5 கிலோ பசுந்தீவனம் சேர்க்கப்படவேண்டும். மிதமான பால்உற்பத்தியில் உள்ள மாடுகளுக்கு குறைந்தபட்சம் 70:30 என்ற விகிதத்திலும், அதிக பால் உற்பத்தியுள்ள மாடுகளுக்கு அதிகபட்சம் 40:60 என்ற விகிதத்திலும் உலர், பசுந்தீவனத்துடன் அடர்தீவனம் சேர்க்கப்பட வேண்டும்.

உதாரணமாக சிறையில்லாத வளர்ந்த பசுமாட்டிற்கான மாதிரி முழு கலப்புத் தீவனத் தயாரிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கணக்கிடப்படும் அளவுடன் 10.20 சதவிகிதம் கூடுதல் முழு கலப்புத் தீவனம் கொடுத்து பால் உற்பத்தியை கண்காணித்து அதற்கேற்ப மாடுகளுக்குத் தேவையான சரியான தீவன அளவை பண்ணையாளர்கள் தீர்மானிக்கலாம்.

உடல் எடை (கிலோ) - 450, பால் உற்பத்தி (4மூ கொழுப்பு) (லி) -15,12,8. முழு கலப்புத் தீவன அளவு (கிலோ) – காலை -18, 16, 15. மாலை -17, 16, 14. கலப்பு விகிதம் - 62:38, 64:36, 67:33. உலர் தீவனம் + பசுந்தீவனம்) + அடர்தீவனம் - கிலோ ஒரு மாட்டிற்கு, ஒரு நாளைக்கு (21+7)+6.5, (21+5)+5.5, (21+4)+4.5,  உத்தேச செலவு (கிலோவிற்கு) - ரூ. 6.12, 5.70, 5.00.

முழுநேர கலப்புத் தீவனம் மட்டுமே மாடுகளுக்கு கொடுத்தால் போதுமா? ஆம். ஊட்டச்சத்துகள் கிடைக்கும் அளவு சரியாக கணக்கிடப்பட்டால் முழு கலப்புத் தீவனம் மட்டுமே மாடுகளுக்கு போதுமானது. மேய்ச்சலும் தேவையில்லை.

முழுநேர கலப்புத் தீவனம் தயாரித்து எத்தனை நாட்கள் வைத்திருக்கலாம்? பசுந்தீவனம் சேர்க்கும் பட்சத்தில் முழு கலப்புத் தீவனத்தை அன்றே மாடுகளுக்கு கொடுத்துவிட வேண்டும். பசுந்தீவனம் சேர்க்காமல் தயாரிக்கப்பட்ட முழு கலப்புத் தீவனக் கட்டிகள் சில மாநிலங்களில் வணிகரீதியில் விற்கப்படுகின்றன. இதனை மாதக்கணக்கில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

என்னென்ன பசுந்தீவனம் மற்றும் உலர்தீவனங்களைச் சேர்க்கலாம்? கம்பு நேப்பியர் ஓட்டுத்தீவனம் (கோ4) போன்ற புல்வகைகள், தீவன சோளம், பயறு வகைத் தீவனங்களான தட்டைப்பயறு, வேலிம்பால் ஆகியவற்றைச் சேர்க்கலாம். உலர் தீவனங்களான வைக்கோல், சோளத்தட்டை போன்றவற்றையும் சேர்க்கலாம். பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் இரண்டையும் கலந்து தயாரிப்பது சிறந்தது. பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனங்கள் சுமார் 1-3 அங்குலமுள்ள சிறு துண்டு களாக நறுக்கப்பட்டு முழு கலப்புத் தீவனம் தயாரிக்க வேண்டும்.  மரஇலைகளை பச்சையாகவோ உலர்த்தியோ பயன்படுத்தலாம்.

அடர்தீவனத்திற்கு பதிலாக தீவன மூலப்பொருட்களைச் சேர்க்கலாமா? ஆம். பொதுவாக அடர்தீவனத்திற்கு பயன்படுத்தப்படும் அனைத்து தீவன மூலப்பொருட் களையும் நேரடியாகவே முழு கலப்புத் தீவனத்தில் சேர்க்கலாம். அதனுடன் உப்பு மற்றும் தாதுஉப்புக் கலவையையும் கண்டிப்பாக சேர்க்க வேண்டும்?

முழு கலப்புத் தீவனத்தின் நன்மைகள் என்ன?

1. உலர் தீவனம், பசுந்தீவனம் மற்றும் அடர்தீவனம் ஆகியவற்றை தனித் தனியாக மாடுகளுக்கு கொடுக்க வேண்டியதில்லை.

2. நன்றாக கலந்த தீவனமாகையால் குறிப்பிட்ட தீவன மூலப்பொருட்களை மட்டும் தேர்ந்தெடுத்து உண்பதும், சில தீவன மூலப்பொருட்களை உண்ணா மல் விடுவதும் தவிர்க்கப்படுகிறது.

3. மாடுகளுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட அளிவிலான உலர் மற்றும் அடர் தீவனத்தை அவற்றின் உடல்நிலை மற்றும் உற்பத்திக்கு ஏற்றவாறு கொடுப்ப தால் தீவனம் விரையமாவது குறைகிறது.

4. பண்ணைகளில் பால் உற்பத்திக்குத் தகுந்தவாறு மாடுகளை குழுவாக பிரித்து முழு தீவனக் கலவையை அளிக்கும்போது மாடுகளின் உற்பத்திக்கு போதுமான ஊட்டச்சத்துகள் கிடைக்கப்பெறுகின்றன.

5. முழு கலப்பு தீவனத்தை மாடுகளுக்கு தருவதன் மூலம் மாட்டின் இனத் தினைப் பொருத்து பால் உற்பத்தி சுமார் 10 சதவிகிதம் உயர்வதாக ஆய்வு மேற்கோள்கள் தெரிவிக்கின்றன.

6. பாலில் கொழுப்பு மற்றும் இதர ஊட்டச்சத்துகளும் சீராக இருக்கும்.

7. ஒரு நாளில் தீவனம் எடுக்கும் அளவை எளிதில் கண்டறிய முடியும். இதன் மூலம் தீவன செலவை குறைக்க முடியும்.


8. குறைந்த அளவிலான மரபுசாரா தீவன மூலப்பொருட்கள், தரம் மற்றும் ருசி குறைந்த தீவனப் பொருட்களை எளிதில் முழு கலப்புத் தீவனமாக மாற்றி தரலாம்.

9. அமில நோய், கீட்டோன் செறிவுநிலை அதிகரித்தல் மற்றும் மாடுகளின் நான்காம் இரைப்பை இடமாற்றம் ஆகிய நோய்கள் பெருமளவு தடுக்கப் படுகிறது.

சிரமங்கள் என்ன?

மாடுகளின் உடல் எடை மற்றும் பால் உற்பத்திக்குத் தகுந்தாற்போல் குழுக்களாக பிரிக்கப்பட வேண்டும். நடுத்தர மற்றும் பெரிய மாட்டுப் பண்ணைகளுக்கு முழு தீவன கலவை தயாரிக்க தீவன டி.எம்.ஆர். கலவை இயந்திரம் தேவைப்படுகிறது. சிறு பண்ணைகளுக்கு குறைந்தபட்சம் உலர் மற்றும் பசுந்தீவனங்களை நறுக்கும் இயந்திரம் தேவைப்படுகிறது. வைக் கோல் மற்றும் சோளத்தட்டை ஆகியவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கிய பின்பு டி.எம்.ஆர். கலவை இயந்திரத்தில் சேர்க்க வேண்டும்.

தொகுப்பு : முனைவர். து.ஜெயந்தி, முனைவர். ப.ரவி, மற்றும் மருத்துவர் ¬ந.ஸ்ரீபாலாஜி, தொடர்புக்கு : கால்நடை மருத்துவ பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், சேலம்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!