பொருளாதாரத்தை உயர்த்தி கொள்ள விவசாய நல்வாழ்வு பணிமனை அமைப்பு அமைச்சர் பாஸ்கரன் தகவல்

Agri exhibition  3 4 18

சிவகங்கை, - பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் உயர்த்திக் கொள்வதற்கு விவசாய நல்வாழ்வு பணிமனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் வேளாண்மைத் துறை மூலம் விவசாயிகள் நல்வாழ்வு பணிமனை கருத்தரங்கு மற்றும் கண்காட்சி துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் லதா தலைமை வகித்தார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் கண்காட்சியினை துவக்கி வைத்து பேசியதாவது,
           முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் கிராமப் பகுதியிலுள்ள பொதுமக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தனிக் கவனம் செலுத்தி பல்வேறு சிறப்பு திட்டங்களை வழங்கி வந்தார். நவீனகாலத்தில் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதன் வாயிலாக விவசாயிகள் குறைந்த செலவில் தங்கள் பணிகளை மேற்கொண்டு அதிக மகசூல் ஈட்டி தங்களது பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் உயர்த்திக் கொள்வதற்கு இந்த விவசாய நல்வாழ்வு பணிமனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பெண்கள் அதிகளவில் ஈடுபாட்டுடன் விவசாயப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் தற்போது நிலவி வரும் தொழில் நுட்பத்துடன் கூடிய வேளாண் முறையினை கற்று அவர்களும் அதிகளவில் ஆர்வமுடன் செயல்பட இதுபோன்ற கண்காட்சிகள் பயனுள்ளதாக இருக்கும். எனவே பெண்கள் புதிய தொழில் நுட்ப முறையினை கையாள ஆர்வம் காட்ட வேண்டும்.
மேலும் விவசாயிகள் அனைவரும் பாசன நீர் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு பல்வேறு திட்டங்கள் குறித்த விவரங்களை உழவன் கைபேசி செயலி மூலம் தங்களது கைபேசியின் வாயிலாக எளிதாக இருக்கும் இடத்திலிருந்தே அனைத்து விவரங்களையும் மானியங்கள் குறித்த விளக்கங்களையும் தெரிந்து கொள்ள முடியும். தங்கள் பகுதியிலுள்ள வேளாண் அலுவலகத்திலுள்ள விதைகள் மற்றும் உரங்கள் கையிருப்பு குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம். வேளாண் அலுவலர்களை எளிதாக தொடர்பு கொள்ளவும், திட்டங்கள் குறித்து அறிந்து தங்களை பயனாளிகளாக பதிவு செய்து கொள்வதற்கும் , பாரத பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்வதற்கும் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை விவசாயிகள் பெறுவது வரை அதன் குறித்த விவரங்களையும், வானிலை தொடர்பான தினசரி தகவல்களையும் இந்த செயலியின் வாயிலாக விவசாயிகள் தெரிந்து கொள்ளலாம்.  இவ்வாறு அமைச்சர் பேசினார். பின்னர் வேளாண்மைத்துறையின் மூலம் பயனாளிகளுக்கு மண்வள அட்டை, சூரிய ஒளி விளக்குப் பொறி, காய்கறி விதைகள், ரூபேய் கார்டுகள் ஆகியவற்றை அமைச்சர் வழங்கினார்.
இதில்  மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, வேளாண்மை இணை இயக்குநர்(பொ) ஜெயராஜ், கால்நடைப் பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.கருணாகரன், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் முனைவர் செந்தூர்குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து