முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் உயிர்உர உற்பத்தி மையத்தில் கலெக்டர் நடராஜன் நேரில் ஆய்வு செய்தார்

புதன்கிழமை, 20 ஜூன் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் உயிர்உர உற்பத்தி மையத்தில் கலெக்டர் முனைவர் நடராஜன் நேரில் சென்று ஆய்வு செய்தலார்.
 தமிழ்நாடு அரசு, வேளாண்மை பணிகளில் இரசாயன உரங்களை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான உயிர் உரங்களின் பயன்பாட்டினை அதிகரித்திடும் நோக்கில் வேளாண்மைத்துறையின் மூலம்  உயிர் உரங்கள் உற்பத்தி மையங்களைச் செயல்படுத்தி வருகிறது.  மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்கள் உயிர் உரங்களின் உற்பத்திக்கு முக்கியத்துவம் வழங்கிடும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 2014 முதல் 2017ஆம் ஆண்டு வரை மொத்தம் 12 புதிய உயிர் உர உற்பத்தி மையங்களை துவக்கி வைத்தார்கள்.  தமிழகத்தில் தற்போது மொத்தம் 22 உயிர் உர உற்பத்தி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.  இதன் மூலம் இந்தியாவிலேயே உயிர் உர உற்பத்தியில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. 
 அந்த வகையில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்திய இத்தகைய திட்டங்களை மேலும் சிறப்பிக்கும் வகையில் 05.06.2018 அன்று சட்டமன்ற பேரவையில் நடைபெற்ற வேளாண்மைத்துறை மானியக் கோரிக்கையின் போது, விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மைத்துறையின் மூலம் உற்பத்தி செய்து விநியோகிக்கப்படும் உயிர் உரங்களை அம்மா உயிர் உரங்கள் என பெயரிட்டு மிக குறைந்த விலையில் நவீன உறைகள் இட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மைத்துறையின் கீழ் சக்கரக்கோட்டை மகாசக்தி நகரில் அம்மா உயிர் உர உற்பத்தி மையம் செயல்பட்டு வருகிறது.  இம்மையத்தில் அசோஸ்பைரில்லம் - நெல், அசோஸ்பைரில்லம் - இதரம், ரைசோபியம் - பயிறு, ரைசோபியம் - கடலை, பாஸ்போபாக்டீரியா என 5 வகையான உயிர் உரங்கள் திட உரமாகவும், திரவ உரமாகவும் உற்பத்தி செய்யப்படுகிறது.  ஆண்டொன்றிற்கு சராசரியாக 100 மெ.டன் திட உரமும், 50,000 மீ அளவில் திரவ உரமும் உற்பத்தி செய்யப்பட்டு, வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக விவசாயிகளுக்கு மிக குறைந்த விலையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.  குறிப்பாக திட உரம் 200 கி பொட்டலம் ரூ.6 வீதமும், திரவ உரம் 1 லிட்டருக்கு ரூ.280 வீதமும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் மாவட்ட கலெக்டர் முனைவர் ச.நடராஜன் இந்த அம்மா உயிர் உர உற்பத்தி மையத்தின் செயல்பாடுகள் குறித்து நேரிடையாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- வேளாண்மைப் பணிகளில் தொடர்ச்சியாக இரசாயன உரங்கள் பயன்படுத்துவதன் காரணமாக மண்வளம் அதிகளவில் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.  இதனை தவிர்த்திடும் வகையில் விவசாயிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்மா உயிர் உரங்களை அதிகளவில் பயன்படுத்திட வேண்டும்.  இதன்மூலம் மண்ணின் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரித்து மண்வளம் பாதுகாக்கப்படுவதோடு அதிக மகசூல் பெற முடியும்.  எனவே அம்மா உயிர் உரங்களை பயன்படுத்துவதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேளாண்மைத்துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
 இந்த ஆய்வின் போது வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பி.இந்திராகாந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பி.ராஜா, வேளாண்மை அலுவலர்கள் அம்பேத்குமார், எம்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து