கம்பம் அருகே சுருளி அருவியில் ஜந்தாவது நாளாக குளிக்க தடை.
கம்பம், தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க ஜந்தாவது நாளாக இன்று வெள்ளிக்கிழமை தடை விதித்து மேகமலை வன உயிரின சரணாலய கம்பம் வனச்சரகர் சுரேஷ் உத்தரவிட்டுள்ளார்.தென் தமிழகத்தின் தலை சிறந்த சுற்றுலாத் தலமும் தென் மாவட்டத்தின் சின்ன குற்றலாமான சுருளி அருவியில் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை மற்றும் சாரல் மழையால் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.மேலும் மேகமலை ஹைவேவிஸ் மலைப் பகுதியில் கன மழை பெய்து வருவதால் அருவியில் வரும் தண்ணீர் காட்டாற்று வெள்ளம் போல் மணல் கல் போன்றவைகளுடன் தண்ணீர் விழுகிறது.இதனால் சுருளி அருவியில் ஜந்தாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு வனப் பணியாளர்கள் அருவிப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.