மண்டபம் குஞ்சார்வலசையில் காந்தாரிஅம்மன் ஆலய முளைக்கொட்டு விழா

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018      ராமநாதபுரம்
RMD NEWS

மண்டபம்,- ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள புகழ்வாய்ந்த காந்தாரி அம்மன் ஆலய முளைக்கொட்டு உற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது.
    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள குஞ்சார்வலசை கிராமத்தில் அமைந்துள்ள புகழ்வாய்ந்த காந்தாரி மாரியம்மன் ஆலய 22-ம் ஆண்டு முளைக் கொட்டு உற்சவ விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது கடந்த 3 -ம் தேதி முனியசாமி ஆலயத்தில் விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 5-ம் தேதி காந்தாரி மாரியம்மன் ஆலயத்திலிருந்து முளைப்பாரிக்கு முத்து எடுக்கும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து 7-ம் தேதி  முத்து பரப்புதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தினமும் இரவு காந்தாரி மாரியம்மன் ஆலயத்தில் இரவு இளைஞர்களின் ஒயிலாட்டம் நடைபெற்று வந்தது. நிகழ்ச்சியின் முக்கிய நாளான 14-ம் தேதி  இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடை பெற்றது. அதனை தொடர்ந்து அம்மன் கரகத்துடன் பெண்கள் முளைப்பாரிகளை கோவிலுக்கு எடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து 15-ம் தேதி புதன்கிழமை ஏராளமான பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். அதனை தொடர்ந்து பக்தர்களின் அக்கினி சட்டி, இளநீர் காவடி, ஆயிரம் கண் பானை எடுத்து நேத்திக்கடன்களை செலுத்தினர்.
     அதனைத் தொடர்ந்து அக்கினி சட்டியுடன் ஊர் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வாக அன்று மாலை கோவிலில் இருந்து அம்மன் கரகத்துடன் பெண்கள் முளைப்பாரியை சுமந்து  தென் கடற்கரைக்குச் சென்று கடலில் கரைத்ததுடன் விழா நிறைவு பெற்றது. இந் நிகழ்ச்சிக்கான  ஏற்பாடுகளை கிராமத் தலைவர் பொன்னுச்சாமி, துணைத் தலைவர் அசுபதி, செயலாளர் ஜெயபிரகாஷ் , பொருளாளர் பொன்னுச்சாமி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.  மண்டபம் காவல்துறையினர் விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து