அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் ஒச்சம்மாள் மரணம் மதுரையில் இன்று உடல் தகனம்

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2018      தமிழகம்
raju amma 30-08-2018

மதுரை,கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் தாயார் ஒச்சம்மாள் நேற்று மரணமடைந்து விட்டார். அவரது உடல் இன்று மதியம் மதுரையில் தகனம் செய்யப்படுகிறது.

மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூவின்  தாயார் ஒச்சம்மாள் (90). கடந்த சில மாதங்களாக அவர் உடல்நலக்குறைவால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்களாக அவரது உடல் நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு இருந்தது. ஆனாலும் டாக்டர்கள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் தாயார் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் இருந்து மதுரை செல்லூரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சிறிது நேரத்தில் ஒச்சம்மாள் மரணமடைந்து விட்டார்.

தாயார் மரணம் அடைந்ததை அறிந்த அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, அவரது மனைவி ஜெயந்தி ராஜூ மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். ஒச்சம்மாள் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

ஒச்சம்மாள் உடல்  செல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து  செல்லப்பட்டு இன்று ( வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணியளவில்  தத்தனேரியில் தகனம் செய்யப்படுகிறது. அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் தாயார் மறைவையொட்டி அ.தி.மு.க.இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து