மக்கள் விரும்பும் நாட்டுக்கோழி வளர்ப்பு

சனிக்கிழமை, 19 ஜனவரி 2019      வேளாண் பூமி
Hen-eggs

Source: provided

மக்களிடையே தற்பொழுது பாரம்பரிய உணவு வகைகளான கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, பார்லி போன்றவை பிரபலமடைந்து வருகின்றன. அந்த வகையில் நாட்டுக் கோழி இறைச்சியும், நாட்டுக் கோழி முட்டையும் பிரபலமடைந்து வருகின்றன. நாட்டுக்கோழி வளர்ப்பு பாரம்பரியமாக குறிப்பாக கிராமப்புறங்களில் இன்றும் வளர்க்கப்படுகிறது. கிராம மகளிரே பெரும்பாலும் இதை பராமரிக்கின்றனர்.

கடந்த சில வருடங்களில் நாட்டுக் கோழியின் இறைச்சியை அதிக அளவில் மக்கள் விரும்பி உண்ண ஆரம்பித்துள்ளார்கள். ஆகவே தமிழகத்தில் வியாபார ரீதியில் தீவிர முறையில் நாட்டுக் கோழிகள் இனப்பெருக்கத்திற்காக பராமரிக்கப்பட்டு ஒருநாள் குஞ்சுகளாக லட்சக்கணக்கில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் உள்ளூர், வெளியூர் சந்தையிலும் நாட்டுக் கோழிகள் விற்பனை செய்யப்படுகின்றன. தோராயமாக தற்போது தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் மேல் நாட்டுக் கோழிகள் வளர்க்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டுக்கோழி வளர்ப்பதற்கான அனுகூலங்கள்

இறைச்சிக் கோழி மற்றும் முட்டை கோழி பண்ணை தொடங்க அதிக அளவு முதலீடு தேவை. ஆனால் நாட்டுக் கோழி வளர்க்க குறைந்த முதலீடு போதும். எளிமையான பராமரிப்பே போதுமானது. அதிக நார்ச் சத்துக்கள் உணவை உட்கொள்ளும் இயல்பு கொண்டவை. குறைந்த புரதம் மற்றும் எரிசக்தி கொண்ட தானியங்களை உட்கொண்டு முட்டையிடும் திறன் கொண்டவை. கலப்புத் தீவனம் மட்டும் அல்லாமல் காய்கறி கழிவுகள் மற்றும் புல், பூண்டு போன்றவை உண்பதால் தீவனச்செலவு குறையும். அதிக நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் நீண்ட காலம் உயிர் வாழும் தன்மை கொண்டவை. குறைந்த கொழுப்பு சத்து கொண்ட நாட்டுக்கோழி இறைச்சி வயோதிகர்களுக்கு பெற்றது. கிராம மக்களின் புரதத் தேவையை நாட்டுக்கோழி முட்டைகளும் பூர்த்தி செய்கின்றன.

கோழி இனங்கள்

நாட்டுக்கோழிகளில் நான்கு முக்கிய தூய இனங்கள் உள்ளன. அவை அசீல்,  கடக்நாத், சிட்டகாங் மற்றும் பஸ்ரா முதலியனவாகும். தற்பொழுது இந்தியாவில் 20-க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழி இனங்கள் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டுக்கோழிகளை தீவிர முறை, புறக் கடை மற்றும் குறைந்த எண்ணிக்கையிலுள்ள நாட்டுக் கோழிகள் என பராமரிப்பு வசதிகளுக்காக வகைப்படுத்திக் கொள்ளலாம்.

தீவிர முறை வளர்ப்பில் அசீல் மற்றும் அசீல் கலப்பினங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புறக்கடை வளர்ப்பிற்காக நந்தனம் கோழி - 1 மற்றும் 2 மற்ற மாநிலங்களில் உருவாக்கப்பட்ட வனராஜா, கிரிராஜா,  கிராமப்பிரியா முதலியவற்றை உதாரணமாகக் கூறலாம். மொட்டை கழுத்து கோழி (கிராப்புக்கோழி), நிக்கோபாரி, பஞ்சாப் பழுப்பு, மிரி,  டவோதி கிர் முதலியவற்றைக் குறைந்த எண்ணிக்கையில் உள்ள நாட்டுக்கோழிகளுக்கு உதாரணமாகக் கூறலாம்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தில் நாட்டுக்கோழிகளின் பாரம்பரிய குணாதிசயங்களைக் கொண்ட கோழி இரகங்கள் பல வருட ஆராய்ச்சிக்கு பின் உருவாக்கப்பட்டன. இதில் இறைச்சிக்காக இரண்டு மாத வயதில் சுமார் 1500 கிராம் உடல் எடை அடையக்கூடிய ரகமும், கிராமப்புறக் புறக்கடை முறையில் மேய்ச்சலுடன் தீவனமளித்து வருடத்திற்கு சுமார் 150 முட்டைகள் இடும் இரகமும் பணியாளர்களிடமும் மக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

நாட்டுக்கோழி வளர்ப்பு முறைகள்

நாட்டுக்கோழிகளை இறைச்சி, முட்டை மற்றும் இனப்பெருக்கத்திற்காக வளர்க்கலாம். இறைச்சிக்காக, ஒருநாள் வயது முதல் இரண்டு வார நாட்டுக்கோழி குஞ்சுகளை பெற்று 12 வாரம் வரை வளர்த்து  1 முதல் 1.25 கிலோ எடை அடையும் பொழுது விற்பனை செய்யலாம். பொதுவாக நாட்டுக்கோழிகளை இறைச்சிக்காக வளர்க்கும் போது அவை 90 நாள்களில் ஒரு கிலோ எடை அடையும். முட்டைக்காக வளர்க்கும் தரமான பெட்டைக் கோழிகளை வளர்க்கும் போது அவை 20 வாரத்திலிருந்து முட்டையிட ஆரம்பிக்கும். நாட்டுக் கோழிகள் ஒரு வருடத்தில் சுமார் 100 முட்டைகள் வரை இடும். தனுவாஸ் அசீல் கோழி வருடத்திற்கு 160 முட்டைகள் வரை இடும்.

இனப்பெருக்க நாட்டுக்கோழிகளுக்காக,  10 பெட்டைக் கோழிகளுக்கு ஒரு சேவல் வீதம் தாய் கோழிகளை வளர் பருவத்தில் (12-20 வாரத்தில்) வாங்கி அவற்றுக்கு தரமான இனப்பெருக்க கலப்புத் தீவனம் வழங்க வேண்டும். இனவிருத்திப் பெட்டைக் கோழிகள் ரூ.300-க்கும், சேவல்கள் ரூ.500 -க்கும் விற்கப்படுகின்றன. 24 வாரத்திற்கு பிறகு தாய்க்கோழிகள் கரு முட்டைகளை இடும். பிறகு கரு முட்டைகளை அடை வைத்து பெறப்படும் குஞ்சுகளை விற்பனை செய்யலாம். இனப்பெருக்க நாட்டுக்கோழிகளை பண்ணையில் வளர்க்கத் தொடங்கிய உடன் முறையாக கோழிகளுக்கான தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். தற்போதுள்ள சூழலில் நாட்டுக்கோழி முட்டை மற்றும் இறைச்சி குறைவாகவே கிடைக்கின்றன இருப்பினும் நாட்டுக்கோழி மற்றும் இறைச்சியின் மேல் உள்ள நாட்டம் நுகர்வோரிடத்தில் சிறிதும் குறையவில்லை. வீரியமுள்ள இனவிருத்திக் கோழிகளை தேர்வு செய்து தரமான முட்டைகளை சேகரித்து குஞ்சு பொரிப்பான் அல்லது தாய்க்கோழி மூலம் குஞ்சுகளை பெற்று முறையான சந்தைப்படுத்துதல் மூலம் பண்ணையாளர்கள் அதிக லாபத்தை அடைவதற்கு திட்டமிட முடியும்.

தீவனம் அளிக்கும் முறைகள்

பெரும்பாலும் புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளுக்கு பிரத்தியேக அடர் தீவனம் அளிப்பதில்லை ஆனால் தற்போது நாட்டுக் கோழிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பிரத்தியேகத் தீவனம் அவசியமாகிறது. நாட்டுக்கோழிகளுக்கு குஞ்சுத்தீவனம்,  வளர்கோழித்தீவனம் மற்றும் முட்டைத் தீவனம் என மூன்று வகையான அடர் தீவனங்கள் முறையே 4 வாரங்களுக்கும்,  5-20 வாரங்களுக்கும் மற்றும் 21 வார வயதிற்கு மேலும் என வழங்க வேண்டும். இறைச்சிக்காக வளர்க்கப்படும் நாட்டு கோழிகளுக்கு ஒன்று முதல் நான்கு வாரங்களுக்கு தினசரி 30 கிராம் வீதம் அடர் தீவனம் அளிக்க வேண்டும்.

5 8 வாரங்களுக்கு 50 கிராம் தீவனத்துடன் உடைந்த கோதுமை, நொய்யரிசி மற்றும் மேய்ச்சலில் வளர்க்க வேண்டும். 9- 16 வாரங்களுக்கு 50 கிராம் தீவனத்துடன் காய்கறி கழிவுகள் மற்றும் இதர தானியங்களை அளிக்க வேண்டும். முட்டைக்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் வளர்க்கப்படும் நாட்டு கோழிகளுக்கு கண்டிப்பாக நாள் ஒன்றுக்கு 80 கிராம் அடர்தீவனம்,  இதர தானியங்கள் மற்றும் மேய்ச்சல் அவசியம். உற்பத்திச் செலவில் தீவனச் செலவு சுமார் 75 சதவீதம் இருப்பதால் அடர்தீவனத்துடன் எளிதில் கிடைக்கும் குறைந்த விலை தானியங்களை நாட்டுக்கோழிகளுக்கு அளிப்பதால் உற்பத்தி செலவு குறைந்து வருமானம் அதிகரிக்கும்.

கோழிகளுக்குத் தேவையான கரையான் உற்பத்தி 

கோழிகளுக்கு கரையான் சிறந்த புரதச்சத்து ஆகும். கரையான் வெப்ப நாடுகளைச் சேர்ந்த பூச்சியாகும். இது இரவில் மட்டும் செயல்படும் உயிரினமாகும். இது நார்ச்சத்துள்ள பொருள்களை உண்டு வாழும். கரையான் உற்பத்தி செலவே இல்லாத ஒரு தொழில்நுட்ப செயலாகும். கோழிகளை பண்ணைகளில் வளர்க்கும் போது கோழிகளுக்குத் தேவையான புரதச்சத்து தீவனம் மூலம் வழங்கப்படுகிறது. ஆனால் புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டு கோழிகளுக்கு புரத சத்து மிகக் குறைவாகவே கிடைக்கிறது. இதனை ஈடு செய்வதற்கு கரையானை உற்பத்தி செய்து கொடுப்பது அவசியமாகிறது.

கரையானில் கீழ்க்கண்ட சத்துக்கள் அடங்கி உள்ளன. புரதம் -36 சதவீதம், கொழுப்பு - 44.4 சதவீதம், எரிசக்தி - 560 கிலோ கலோரி 100 கிராம். இத்துடன் கரையான்களில் வளர்ச்சி ஊக்கிகள் என்னும் உடல் வளர்ச்சிக் பொருள் உள்ளதால் வளர்ச்சி விகிதம் 15 சதவீதம் அதிகமாகிறது. பறவைகள் பலவிதம் என்பதைப்போல் கரையான்களிலும் பலவிதம் உண்டு. டாம்ப்   உட் டெர்மைட் என்னும் ஈரக் கட்டை கரையானை நாம் உற்பத்தி செய்கிறோம். பழைய மண் பானை,  கோணிப்பை (சாக்குப்பை), உலர்ந்த மாட்டுச்சாணம், பழைய மரத்துண்டுகள், உலர்ந்த வைக்கோல், மரப்பட்டைகளும் ஒலையும், பழைய துணி போன்றவை கரையான் உற்பத்திக்குத் தேவையான பொருள்கள் ஆகும்.

மேற்கூறிய பொருள்களை வாயகலமான மண்பானையில் அழுத்தி வைத்து சிறிது தண்ணீரைத் தெளித்து வீட்டிற்கு வெளியே ஒதுக்குப்புறமாக ஒரு இடத்தில் கவிழ்த்து வைக்க வேண்டும். மாலை நேரத்தில் இந்தப் பானையை வைத்து விட்டால் காலை நேரத்தில் அதிக அளவில் கரையான்கள் உற்பத்தி ஆகிவிடும். மாலையில் கவிழ்ந்த பானையை காலை நேரத்தில் நேராக நிமிர்ந்து வைத்து விட வேண்டும். இதனை தாய் கோழிகள் உட்கொண்டு நன்றாக வளரும். புதுக்கோட்டை, திருநெல்வேலி மற்றும் தென்மாவட்டங்களில் கரையான் வளர்ப்பு இன்றும் கடைபிடிக்கப்படுகிறது. செம்மண் இருக்கும் பகுதிகளில் கரையான் உற்பத்தி அதிகமாக இருக்கும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் அடை மழை பெய்யும் போது கரையான் உற்பத்தி ஆகாது. எறும்புகள் கரையானுக்கு எதிரி என்பதால் எறும்பு புற்று இருக்கும் இடங்களில் கரையான் உற்பத்தி ஆகாது.

எவ்வாறு விற்பனை செய்வது?

வியாபார ரீதியில் அதிக எண்ணிக்கையில் கோழிக்குஞ்சுகள் பெரிய குஞ்சு பொரிப்பகங்கள் மூலம் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் குறைந்த எண்ணிக்கையில் நாட்டுக்கோழி குஞ்சுகளின் தேவையை பூர்த்தி செய்வதற்கு சிறிய இன்குபேட்டர் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பண்ணையாளர்களின் தேவைக்கேற்ப தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை மாதவரத்தில் இயங்கும் கோழியின ஆராய்ச்சி நிலையம், நாமக்கல் மற்றும் திருநெல்வேலி கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஓசூர், கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரி மற்றும் புதுக்கோட்டை, மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி நிலையம் மூலமாக நாட்டுக்கோழி குஞ்சுகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் சில தனியார் நிறுவனங்களும் நாட்டுக்கோழிக்குஞ்சுகளை உற்பத்தி செய்து வருகின்றன. ஒருநாள் நாட்டுக் கோழிக் குஞ்சின் விலை ரூ.30-35 ஆகும்.

விற்பனை வாய்ப்புகள்

பண்ணைப் பராமரிப்பில் வெற்றி என்பது இலாப நட்டத்தை பொறுத்தே அமைகிறது. பெரும்பாலான பண்ணையாளர்கள் தங்கள் பண்ணைகளின் வரவு செலவுகளில் போதுமான கவனம் செலுத்துவதில்லை. கவனக் குறைவின் காரணமாக பண்ணையின் பொருளாதார நிலையை உடனடியாக அறிய முடிவதில்லை. இதனால் ஏற்படும் அல்லது வரவிருக்கும் நட்டத்தையோ இலாபத்தையோ அறிந்து கொள்ள முடியாமல் போகின்றது. இந்நிலையை போக்கவும் இலாபகரமாக பண்ணை தொழில் நடத்தவும் முறையான பொருளாதார கணக்கீடு அவசியம். நாட்டுக்கோழி முட்டைகளுக்கும் அவற்றின் இறைச்சிக்கும் மக்களிடையே கூடுதலான வரவேற்பு இருப்பதால் நாட்டுக்கோழிகளுக்கு நல்ல விற்பனை விலை கிடைக்கின்றது. பெரும்பாலான கிராமங்களில் குறிப்பாக பெண்கள் குறைந்த அளவில் 10 முதல் 20 நாட்டுக்கோழிகளை வளர்த்து அவற்றில் கிடைக்கும் நிலையான வருமானத்தை காசு சிறுவாட்டுக்காசு என்னும் சிறுசேமிப்பாகச் சேர்த்து குடும்பத் தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்கிறார்கள். வீட்டில் திடீரென்று ஏற்படும் செலவினங்களுக்கு தங்களிடம் உள்ள நாட்டுக்கோழிகளை விற்று பயன்படுத்துவதால் நாட்டுக்கோழிகளுக்கு நடமாடும் வங்கி என்ற பெயர் பொருத்தமானதாகும். தமிழகத்தில் புதுக்கோட்டை, ஈரோடு, கரூர்,  திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்கள் நாட்டுக்கோழி இறைச்சி உற்பத்தியில் முன்னணியில் உள்ளன.

Pillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு

அம்மியில் அரைத்து, மசாலா உதிராமல் மீன் வறுவல் | Traditional Fish fry in tamil | Viraal meen varuval

How to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil

Nattu kozhi Pepper Fry in Tamil | நாட்டு கோழி மிளகு கறி | Chicken Pepper fry | Country Chicken Fry

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Chicken Popcorn Recipes in Tamil |சிக்கன் பாப்கார்ன்|Crispy Fried Chicken|Chicken Recipes in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து