முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் ராமநாதபுரம் கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் வெளியிட்டார்

வியாழக்கிழமை, 31 ஜனவரி 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பட்டியலை கலெக்டர் வீரராகவராவ் வெளியிட்டார்.
 இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்  01.01.2019-ஆம் நாளை தகுதி நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2019 அடிப்படையிலான இறுதி வாக்காளர் பட்டியலினை, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் வீரராகவராவ் வெளியிட்டார். அப்போதுஅவர் கூறியதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் அட்டவணையின்படி 01.01.2019-ஆம் தேதியினை தகுதி நாளாகக் கொண்டு கடந்த 01.09.2018 முதல் 31.10.2018 வரையிலான நாட்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் செய்வதற்கு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.  அதன்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில்  இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இறுதி வாக்காளர் பட்டியலின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளான பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம் மற்றும் முதுகுளத்தூர்  ஆகிய தொகுதிகளில் உள்ள 1367 பாகத்தில்  5,60,173 ஆண் வாக்காளர்களும், 5,62,347 பெண் வாக்காளர்களும், 69 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 11,22,589 (பதினொரு லட்சத்து இருபத்து இரண்டாயிரத்து ஐநூற்று எண்பத்து ஒன்பது மட்டும்) வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் மேற்கொள்வதற்காக 01.09.2018 முதல் 31.10.2018 வரை வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு 9,670 ஆண் வாக்காளர்கள், 10,542 பெண் வாக்காளர்கள், 6 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 20,218 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.  இதில் 18 முதல் 19 வயது வரையில் 10,785 வாக்காளர்களும், 19 முதல் 29 வயது வரையில் 9,433 வாக்காளர்களும் அடங்குவர். அதேபோல 6,111 ஆண் வாக்காளர்கள், 5,564 பெண் வாக்காளர்கள், 2 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 11,677 வாக்காளர்கள் நீக்கப்பட்டும் உள்ளனர்.  குறிப்பாக இரட்டை பதிவு காரணமாக 1,830 நபர்களும், இடமாற்றம் காரணமாக 3,463 நபர்களும், இறப்பு காரணமாக 6,384 நபர்களும் நீக்கப்பட்டுள்ளனர். இன்று (31.01.2019) வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில், 01.09.2018 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலைவிட 8,541 வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். 
 இந்த நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்கள் வாக்காளர் பதிவு அலுவலர்களான ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும சார் ஆட்சியர் அலுவலகங்களிலும், உதவி வாக்குப் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்கள் அதாவது வட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஆணையாளர் அலுவலகங்களிலும் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் வாக்காளர் பட்டியல்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.  மேலும், நகரப் பகுதிகளில் குடியிருப்போர் நலச் சங்கங்களுக்கும், ஊரகப் பகுதிகளில் கிராம சபைகளுக்கும் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் வாக்காளர் பட்டியலின் உரிய பாகத்தின் நகல் அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த இறுதி வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு தங்களது விவரங்களை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறினார். இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மரு.எஸ்.கண்ணபிரான், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (ராமநாதபுரம்) வருவாய் கோட்டாட்சியர் மரு.ஆர்.சுமன், (திருவாடானை) மாவட்ட வழங்கல் அலுவலர் மதியழகன், (முதுகுளத்தூர்) மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இரா.சிவதாசு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, தேர்தல் வட்டாட்சியர் முருகேசன் உள்பட அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து