முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி 23 பேர் பலியான சம்பவம் ஓராண்டு நிறைவு: கொழுக்குமலை கிராம மக்கள் அஞ்சலி

செவ்வாய்க்கிழமை, 12 மார்ச் 2019      தேனி
Image Unavailable

போடி, -     போடி குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி 23 பேர் பலியான சம்பவம் நடந்து ஓராண்டு ஆன நிலையில், இறந்தவர்களுக்கு கிராம மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி  அஞ்சலி செலுத்தினர். இறந்தவர்களின் உறவினர்களும், நண்பர்களும் அஞ்சலி செலுத்தினர். சம்பவ இடத்திற்கு செல்ல வனத்துறை அனுமதி மறுப்பு.
     சென்னை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 36 பேர் மலையேற்ற பயிற்சி மேற்கொள்வதற்காக கொழுக்குமலை கிராமத்திற்கு வந்தனர். கொழுக்குமலையிலிருந்து குரங்கணிக்கு வருவதற்காக மலைப்பாதை வழியாக இறங்கும்போது ஒத்தை மரம் என்ற இடத்தில் காட்டுத் தீ ஏற்பட்டது. இந்த தீயில் சிக்கிய 36 பேரில் 10 பேர் பாதுகாப்பாக
மீட்கப்பட்டனர். 9 பேர் தீயிலிருந்து தப்புவதற்காக பள்ளத்தில் குதித்ததில் பள்ளத்தில் நாலாபுறமும் பற்றிய தீயில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
     17 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டதில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மொத்தம் 23 பேர் இறந்து விட்டனர். காட்டுத் தீயில் சிக்கி 23 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்து ஓராண்டு ஆன நிலையில் கொழுக்குமலை தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள், நிர்வாகிகள், கிராம மக்கள் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
      சம்பவம் நடந்த ஒத்தை மரத்திற்கு செல்ல வனத்துறையினர் அனுமதி மறுத்துவிட்டதால் கொழுக்குமலை கிராமத்திலேயே உயிரிழந்தவர்களின் படங்களுடன் கூடிய பிளக்ஸ் பேனர்களையும் அமைத்திருந்தனர். பின்னர் அவர்கள் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். அப்போது சில பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
     இதேபோல் சென்னை சேர்ந்த, இறந்தவர்களின் உறவினர்கள், நண்பர்கள் சிலரும், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முத்துகுமார், ஜெகதீசன், ராணுவ வீரர் பாஸ்கரன் உள்ளிட்டோரும் சம்பவ இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த முயன்றனர். ஆனால் அவர்களை வனத்துறையினர் தடுத்ததால் பாதையிலேயே ஒரு பாறை கல்லை நினைவு கல்லாக அமைத்து மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். குரங்கணி கிராம மக்களும் சோகமான சம்பவத்தை நினைவு கூர்ந்து, இதுபோன்ற சம்பவம் இனி தங்கள் பகுதியில் ஏற்படக் கூடாது என பிரார்த்தனை செய்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து