பா.ஜ.க. வெற்றி எதிரொலி சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு

வியாழக்கிழமை, 23 மே 2019      வர்த்தகம்
sensex 2019 05 23

புது டெல்லி, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலம் பெற்று பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது.  இதனால் இந்திய பங்குச்சந்தைகள் நேற்று எழுச்சி பெற்று சென்செக்ஸ் முதல் முறையாக 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது.

பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பா.ஜ.க. அதிக தொகுதிகளை கைப்பற்றி வெற்றியை நோக்கி பயணித்துள்ளது. இதனால்  பங்குச்சந்தைகளும் எழுச்சி பெற்றன. மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி அமையும் என்ற நம்பிக்கையில் வர்த்தகர்கள், முதலீட்டார்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதனால் நேற்று காலை முதலே விறுவிறுப்பாக வர்த்தகம் நடைபெற்றது.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டெண் சென்செக்ஸ் 886.56 புள்ளிகள் உயர்ந்து 39,996 புள்ளிகளாக இருந்தது. இதே போல் தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 257.95 புள்ளிகள் உயர்ந்து, 11,995.85 என்ற நிலையில் வர்த்தகம் நடைபெற்றது. அதன்பின்னர் மேலும் எழுச்சி பெற்று, சென்செக்ஸ் 40 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியது. 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது இதுவே முதல் முறையாகும்.

இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 12000 புள்ளிகளை தாண்டி வர்த்தகம் ஆனது. அதன் பின்னர் சற்று சரிவடைந்தது. யெஸ் பேங்க், எல்.அண்ட்டி, எஸ்.பிஐ, ஐ.சி.ஐ.சி.டி. பேங்க், கோட்டக் பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், எச்.டி.எப்.சி. ட்வின்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 8 சதவீதம் அளவிற்கு உயர்ந்தன. வேதாந்தா, ஐ.டி.சி, டி.சி.எஸ் நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயரத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் 14 காசுகள் உயர்ந்து, 69.51 ரூபாயாக இருந்தது. அதன்பின்னர் சற்று சரிவடைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து