ராமேசுவரம் அக்னிதீர்த்தக்கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்,

திங்கட்கிழமை, 3 ஜூன் 2019      ராமநாதபுரம்
3 Rameshwaram Aqueductu


  ராமேசுவரம்,- வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம்  அக்னிதீர்த்தக்கடலில் ஆயிரக்கணகான பக்தர்கள் நேற்று காலையில்  புனித நீராடி  ராமநாதசுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
ராமேசுவரத்தில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு திங்கள் கிழமை அதிகாலையில் 20 ஆயிரத்துக்கு மேலான  பக்தர்கள் கார்,அரசு பேருந்து,ரயில் ஆகியவற்றில் வந்து குவிந்தனர்.அதன் பின்னர் பக்தர்கள்  அக்னிதீர்த்தக்கடலில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் பூஜை,திதிபூஜை,தோஷங்கள் அடங்கிய பூஜைகள் செய்து திருக்கோயிலுள்ள 22 புனித தீர்த்தங்களில்  புனித நீராடினர். அதன் பின்னர் திருக்கோவிலை சுற்றி நான்கு ரத வீதிகளிலும்,திருக்கோவில் பிரகாரத்திலும் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி,பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனையில்  கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து அருள்பெற்று சென்றனர். பக்தர்களின் வருகையொட்டி பகல் முழுவதும்  திருக்கோயில் நடைகள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும்,அபிஷேகங்களும்,தீபாராதனையும் தொடர்ந்து நடைபெற்றது. பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு கருதி ராமேசுவரம் டி.எஸ்.பி மகேஷ் தலைமையில் பாதுகாப்பு பணியில் 100க்கும் மேற்பட்ட போலீஸார்கள் ஈடுபட்டிருந்தனர். திருக்கோயில் சுற்றி நான்கு ரத வீதிகளிலும்,அக்னீதீர்த்தக்கடல் பகுதியிலும் கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தப்பட்டு போலீஸார்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.இதையடுத்து திருக்கோயில் நிர்வாகம் சார்பாக பக்தர்களின் வசதிகளுக்காக குடிநீர், அன்னதானம்,பிரசாதங்கள் உள்பட அனைத்து முன் ஏற்பாடுகளையும் திருக்கோயில் இணை ஆணையாளர் கல்யாணி உத்தரவின்பேரில் திருக்கோயில் அலுவலர்களும்,பணியாளர்களும் செய்திருந்தனர்.      

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து