இனி புதிய தொழிற்சாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நீர் மறுசுழற்சி வசதி அவசியம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

வியாழக்கிழமை, 27 ஜூன் 2019      தமிழகம்
cm edapadi launch 2019 06 27

சென்னை : இனி புதிய தொழிற்சாலைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும்போது நீரை மறுசுழற்சி செய்வதற்கு வசதி செய்தால்தான் அனுமதி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அடிக்கல்...

காஞ்சிபுரம் மாவட்டம், நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பின் முதல்வர் எடப்பாடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தின் முதல்வராக அம்மா இருந்த காலகட்டத்திலே, சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ், சென்னை மக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்க வேண்டும் என்ற அடிப்படையிலே, நெம்மேலியில் 150 எம்.எல்.டி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.  அம்மா அறிவித்ததின் அடிப்படையில்,  அம்மாவினுடைய அரசும் தொடர்ந்து இதை நடைமுறைப்படுத்துவதற்காக, ஒப்பந்தம் கோரப்பட்டு, இறுதி செய்யப்பட்டு அம்மாவினுடைய அருளாசியோடு இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 

நடவடிக்கை...

அம்மா அறிவித்த மற்றொரு திட்டம், பேரூரில், 400 எம்.எல்.டி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதாகும். அந்தத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவதற்கு அரசால் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  நிர்ணயிக்கப்பட்டுள்ள ஒப்பந்த காலத்திற்குள் இந்தப் பணி முடிக்கப்பட்டு, 2021-ம் ஆண்டில் இந்தப் பணிகள் நிறைவு பெற்று, மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.  இந்த இரண்டு திட்டங்களும் நிறைவேறுகின்ற பொழுது, சென்னை மாநகர மக்களுக்கு தங்குதடையில்லாமல் குடிநீர் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அவை வருமாறு:-

கேள்வி:-  கடலோர மாவட்டங்களில் இதே போன்று கடல் நீரை சுத்திகரிக்கும் ஆலை அமைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா?
பதில் :- வறட்சியான கடலோர மாவட்ட பகுதிகளில்,  கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தி அதன் மூலமாக, மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு இந்த அரசு ஆய்வு செய்து கொண்டிருக்கிறது.
கேள்வி:-  குடிநீர் பணிகளுக்காக மத்திய அரசிடம் ஏதாவது நிதி கோரியிருக்கிறீர்களா?
பதில்:-  ஏற்கனவே வறட்சிக்குத் தேவையான நிதி கேட்டிருக்கிறோம்.
கேள்வி:- ஜோலார்ப்பேட்டையிலிருந்து கொண்டு வரப்படும் தண்ணீர் எப்பொழுது வழங்கப்படும்?
பதில்:-  இரண்டு வாரத்திற்குள் அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அதுமட்டுமல்லாமல், தற்போது நிலவுகின்ற வறட்சியினால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதை முழுமையாக தீர்ப்பதற்காக அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ள 200 கோடி ரூபாய் கூடுதலாகவும், ஜோலார்பேட்டையிருந்து ரயிலில் சென்னைக்கு குடிநீர் கொண்டுவதற்கு 65 கோடி ரூபாயும் அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.  ஏற்கனவே 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அந்தப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.   

பேரூர் திட்டத்தைப் பொறுத்தவரை,  இன்றையதினம் அதற்கு விரிவான திட்ட அறிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது 4070.67 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு செய்யப்பட்டது. தற்போது 6078.40 கோடி ரூபாய்க்கு திருத்திய மதிப்பீடு செய்யப்பட்டிருக்கின்றது.  இது ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் மூலமாக 4267.70 கோடி இன்றைக்கு இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது,  எஞ்சிய தொகையான 1810.70 கோடி ரூபாய் தமிழக அரசின் மூலம் இந்தத் திட்டத்திற்கு நிதி ஆதாரம் வகுக்கப்பட்டுள்ளது. 

கேள்வி:-  நெம்மேலியிலுள்ள 4 ப்ளாண்ட் மூலமாக எவ்வளவு எம்.எல்.டி. குடிநீர் கிடைக்கும்?
பதில்:-  தற்போது 210 எம்.எல்.டி தண்ணீர் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது 150 எம்.எல்.டி.க்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கின்றது. விரைவாக, துரிதமாக மத்திய அரசிடமிருந்து சில அனுமதிகள் பெற வேண்டியிருக்கிறது.  அந்த அனுமதிகள் பெற்றவுடன் 400 எம்.எல்.டி. குடிநீர் வழங்கும் திட்டமும் விரைவாக செயல்படுத்தப்பட்டு, சென்னை மாநகர மக்களுக்கு என்றைக்கும் குடிநீர் பிரச்சினை வராத அளவிற்கு எங்களுடைய அரசால் திட்டம் தீட்டப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கேள்வி:- மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறீர்களா? 
பதில்:-  ஒட்டுமொத்த தமிழக மக்களே மழை நீர் சேகரிப்பை ஆர்வத்தோடு முன்வந்து திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென்பதற்காக, ஆங்காங்கே இருக்கின்ற பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களிலே பல்வேறு விழிப்புணர்வுப் பேரணிகள் ஏற்படுத்தி வருகின்றோம்.
கேள்வி:-  நிலத்தடி நீரை மேம்படுத்த என்ன பணிகள் மேற்கொள்ளப் போகின்றீர்கள்?
பதில்:-  மழை நீர் சேகரிப்பு தான் முதற்கட்ட திட்டம். பருவ மழை சரியான அளவில் பொழிந்திருந்தால் ஏரிகள், குளங்கள் முழுவதும் நிறைந்திருக்கும், நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டிருக்கும். மழை பொழிந்தால் தான் நிலத்தடி நீரை உயர்த்த முடியும். அதுமட்டுமல்ல, பெரிய நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் நீரினை சுத்திகரித்து மறுசுழற்சி செய்வதற்கு அரசு இப்பொழுது முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. இனி, புதிய தொழிற்சாலைகள் அல்லது அடுக்குமாடிகள் கட்டுகின்றபொழுது, பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி மூலமாக மீண்டும் பயன்படுத்துவதற்கு சுத்திரிகரிப்பு நிலையத்தை உருவாக்கினால் தான் அதற்கான அனுமதியே வழங்கப்படும். இதனால், கிட்டத்தட்ட 50 சதவிகித நீர் மிச்சமாகிறது.
கேள்வி:-  சுத்திகரிப்பு நிலையங்களினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை சமன் செய்ய என்ன திட்டங்கள் இருக்கின்றது?
பதில்:-  இதில் எந்தவித பாதிப்பும் கிடையாது.
கேள்வி:-  காவிரியிலிருந்து 40 டி.எம்.சி. தண்ணீர் கொடுக்க வேண்டுமென்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதை பெறுவதற்கான தமிழக அரசின் நடவடிக்கை என்ன?
பதில்:- இதில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவானதொரு தீர்ப்பை வழங்கியிருக்கின்றது என்பது ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு தெரியும். கர்நாடக அரசு, மாத வாரியாக, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று தீர்ப்பிலே குறிப்பிட்டிருக்கின்றது, ஆணையமும் அதை வலியுறுத்திக் கூறியுள்ளது. தமிழ்நாடு அரசை பொறுத்தவரைக்கும் டெல்டா பாசன விவசாயிகளுக்கு மாதாந்திர அடிப்படையிலே வழங்கக் கூடிய நீரை கர்நாடக அரசிடமிருந்து பெறுவதற்கு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது,

கர்நாடக அரசும் தண்ணீரை வழங்குவதற்கு முயற்சி செய்வதாக தெரிவித்து வருகின்றார்கள். அவர்கள் தெரிவித்துள்ள சில கருத்துக்களுக்கு நாம் மறுப்பு தெரிவித்திருக்கின்றோம். எங்களுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்கினால் தான் குறிப்பிட்ட காலத்தில் எங்களுடைய விவசாய பெருங்குடி மக்கள் பயிர் நடவு செய்ய முடியும். எனவே, எங்களுக்கு வழங்க வேண்டிய நீரை அவசியம் திறந்துவிட வேண்டுமென்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.
கேள்வி:-  மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று நீங்களும் பலமுறை பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளீர்கள். இருந்த போதும் திட்டப் பணிகளை தொடங்கிக் கொண்டிருக்கின்றார்களே?.
பதில்:-  திட்டப்பணிகள் தொடங்கியுள்ளார்கள் என்பது தவறான செய்தி, எந்த அனுமதியும் கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து மத்திய அரசு தெளிவாக சொல்லியிருக்கின்றது, உச்சநீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் இருக்கின்றது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடக அரசு நடந்து கொள்ளவேண்டுமென்பது தான் எங்களுடைய நிலைப்பாடு, அதைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். மத்திய அரசையும் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். தமிழ்நாட்டிற்கு நன்மை பயக்கக்கூடிய திட்டத்தைத் தான் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். தமிழ்நாட்டை பாதிக்கக் கூடிய எந்தத் திட்டத்தையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றோம். அதுமட்டுமல்ல, தமிழகத்தினுடைய விவசாயப் பெருங்குடி மக்களுக்கு தேவையான நீரைப் பெற்றுத் தருவது தான் இந்த அரசின் முதல் கடமை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நீர் மறுசுழற்சி வசதி

பெரிய நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் நீரினை சுத்திகரித்து மறுசுழற்சி செய்வதற்கு அரசு இப்பொழுது முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. இனி, புதிய தொழிற்சாலைகள் அல்லது அடுக்குமாடிகள் கட்டுகின்றபொழுது, பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி மூலமாக மீண்டும் பயன்படுத்துவதற்கு சுத்திரிகரிப்பு நிலையத்தை உருவாக்கினால் தான் அதற்கான அனுமதியே வழங்கப்படும். இதனால், கிட்டத்தட்ட 50 சதவிகித நீர் மிச்சமாகிறது என்று முதல்வர் எடப்பாடி தெரிவித்துள்ளார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து