லடாக்கில் தேசிய கொடி ஏற்றுகிறார் டோனி

சனிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Dhoni-national flag 2019 08 10

புது டெல்லி  : கிரிக்கெட் வீரர் டோனி ராணுவ சேவையில் மிகுந்த ஈடுபாடு காட்டியதால் கடந்த 2011-ம் ஆண்டு அவருக்கு ராணுவம் சார்பில் கவுரவம் அளிக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு சிறிது நாட்களுக்கு அவர் ராணுவ சேவையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் ஆக்ராவில் பாராசூட்டில் இருந்து குதிக்கும் பயிற்சியை மேற்கொண்டு அதில் தேர்ச்சி பெற்றார். சுமார் 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது அவர் இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்கப்படாமல் ஓய்வு எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் மீண்டும் ராணுவ சேவை செய்ய விருப்பம் தெரிவித்தார். அதன் பேரில் டோனி ராணுவ சேவைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 31-ம் தேதி டோனி ராணுவத்தில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கவுரவ எலட்டினண்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள 106 டி.ஏ. பட்டாலியன் அணியில் சேர்ந்து டோனி ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். வருகிற 15-ம் தேதி வரை ராணுவ சேவையை டோனி மேற்கொள்ள உள்ளார். 15-ம் தேதி அவர் ராணுவ சேவையை நிறைவு செய்யும் முன்பு அன்று சுதந்திர தினத் தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் வாய்ப்பை டோனிக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. காஷ்மீரில் இருந்து லடாக் பிராந்தியம் தனி யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்டு இருப்பதால், அந்த யூனியன் பிரதேசத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அங்கு முதன் முதலாக டோனி மூலம் தேசியக் கொடியை ஏற்றி வைக்க உள்ளனர். லடாக்கில் டோனி தேசியக் கொடி ஏற்றுவதை உறுதி செய்த ராணுவ அதிகாரிகள், 15-ம் தேதி காலை லடாக்கில் எந்த இடத்தில் கொடி ஏற்றுவார் என்பதை தெரிவிக்க மறுத்து விட்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக டோனி கொடி ஏற்றும் இடம் அறிவிக்கப்படாமல் உள்ளது. டோனி கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் லடாக் தொகுதியின் இளம் எம்.பி. ஜம்யங் செரிங் கலந்து கொள்ள உள்ளார்.

சமீபத்தில் இவர் பாராளுமன்றத்தில் லடாக் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்து பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து