முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தகவல் உரிமை சட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு: அமைச்சர் ஜெயகுமார் தகவல்

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தகவல் உரிமை சட்டம் குறித்து மக்களிடையே அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வரும் அலுவலர்களுக்கு, தகவல் பெறும் உரிமைச் சட்டம் - 2005 குறித்து பல்வேறு பயிற்சி வகுப்புகளை அண்ணா மேலாண்மை நிலையம் தொடர்ந்து நடத்தி வருகிறது. அதன் முத்தாய்ப்பாக, அரசுத் துறைகளில் பணியாற்றி வரும், 200 பொதுத் தகவல் அலுவலர்கள், மேல் முறையீட்டு அலுவலர்கள் ஆகியோருக்கான கருத்தரங்கம் அண்ணா மேலாண்மை நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இக்கருத்தரங்கினை மீன்வளத் துறை  அமைச்சர் ஜெயகுமார் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது, தகவல் பெறும் உரிமைச் சட்டம் தொடர்பாக, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறையால் இதுவரை வெளியிடப்பட்டுள்ள அரசாணைகளின் தொகுப்பு, தனி நபர்களுக்கும், தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்களுக்கும், ரூ.100-க்கு விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பினை அமைச்சர் ஜெயகுமார் வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், தகவல் பெறும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் தங்களின் குறைகள் குறித்து அரசுத் துறைகளுக்கு அனுப்பப்பட்ட மனுக்களின் மீது, எவ்வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ளும் வகையில் பொதுமக்களுக்கு அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, தங்களுக்கான உரிமைகள் குறித்தும் பொது மக்களிடையே அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மேலும், அரசுத் துறைகளில் பணிபுரிந்து வரும் அரசு அலுவலர்களும், தங்களுக்கான கடமைகளையும், சமூகப் பொறுப்புகளையும் உணர்ந்து, தங்களது பணிகளை காலவரம்பிற்குள் செய்து முடிக்கின்ற கட்டுப்பாட்டிற்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் அரசின் நலத்திட்டங்கள் உரிய நேரத்தில் மக்களை சென்றடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆரம்ப காலத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் உண்மையான நோக்கம் பொது மக்களும், அரசு அலுவலர்களும் முழுமையாக அறியாததன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே மௌன யுத்தங்கள் நடைபெற்று வந்தன. அண்ணா மேலாண்மை நிலையத்தால் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கூறுகள் குறித்து அரசுத் துறைகளில் பணியாற்றி வரும் அலுவலர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வாயிலாக எடுத்துரைக்கப்பட்டதன் விளைவாக இச்சட்டம் பற்றிய அச்சம் நீங்கி பெறப்படும் மனுக்களுக்கு எவ்வகையில் தகவல்களை வழங்க வேண்டும் என்ற தெளிவு கிடைத்துள்ளது. அது மட்டுமின்றி, பயிற்சிக்கு வருகைபுரியும் பயிற்சியாளர்களுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கூறுகள் குறித்த கையேடுகளும், மாநில தகவல் ஆணையத்தால் வெளியிடப்படும் தீர்ப்புகளின் நகல்களின் தொகுப்புகளும் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் அனைத்து அரசுத் துறை பணியாளர்களும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கூறுகள் குறித்து தெளிவுபட வேண்டும் என்ற நோக்கில், இவ்வகையான பயிற்சி வகுப்புகள், அண்ணா மேலாண்மை நிலையத்தில் மட்டுமின்றி, இந்நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருச்சி, மதுரை மற்றும் சேலம் ஆகிய மண்டல பயிற்சி நிலையங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன என்று குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாநில தகவல் ஆணையர் ஜி.ராமகிருஷ்ணன், கே.எஸ்.ஸ்ரீபதி, ஆகியோர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் கூறுகள் குறித்து பேசினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து