முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமாரசாமி ஆட்சி கவிழ்ந்ததற்கு காரணம் சித்தராமையாதான் - தேவகவுடா குற்றச்சாட்டு

புதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி முறிவடைந்து ஆட்சிக் கவிழ்ந்ததற்கு முன்னாள் முதல்வர் சித்தராமையாதான் காரணம் என்று தேவகவுடா சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

காங்கிரசின் நோக்கம் பா.ஜ.க.வை வெளியேற்றுவதுதான், ஆனால் சித்தராமையாவினால் இந்த முடிவுடன் உடன்பட முடியவில்லை. சித்தராமையாவுக்கும், குமாரசாமிக்கும்தான் உண்மையில் சண்டை என்று கூற வேண்டும். குமாரசாமியை முதல்வராக பார்க்க சித்தராமையாவினால் முடியவில்லை. அவரை இது காயப்படுத்தியது. மேலும் கடும் ஆத்திரத்தில் இருந்தார். அதுவும் மைசூரு சாமுண்டேஸ்வரி தோல்விக்குப் பிறகே மதச்சார்பற்ற ஜனதாதளத்தை அழித்தொழிக்க அவர் சபதம் எடுத்தார்.  கூட்டணிக்கு முன்பாக சித்தராமையாவிடம் ராகுல் காந்தியோ, சோனியாவோ பேசவில்லை. லோக்சபா தேர்தல்களில் என்னுடைய தோல்விக்கும், என் பேரன் தோல்விக்கும் அவர்தான் காரணம். எங்களுக்கு எதிராக வேலை செய்தவர்களுக்கு எதிராக காங்கிரஸ் நோட்டீஸ் கொடுத்ததா? இப்போதைக்கு காங்கிரஸ் கட்சியினுள் சித்தராமையாவை யாரும் எதிர்க்க முடியாது என்ற நிலைதான். சித்தராமையாவின் நோக்கம் என்னவெனில் எடியூரப்பாவை முதல்வராக்கி, தான் எதிர்க்கட்சி தலைவர் நாற்காலியில் அமர வேண்டும் என்பதே ஆகும். அவரும் எடியூரப்பாவும் கடந்த காலத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

சித்தராமையா ம.ஜ.த.வை அழிக்க வேண்டும் என்று நினைத்து இறங்கியதன் தொடக்கம் 2004-ம் ஆண்டு. முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவுடன் சேர்ந்து இதை முயற்சித்தார். 1996-ம் ஆண்டு நான் பிரதமராகப் பதவியேற்க டெல்லி சென்ற போது அவரை முதல்வராக்கவில்லை என்பதிலிருந்து சித்தராமையாவுக்கு என் மீது கடும் கோபம் இருந்தது. 2004-ல் கூட்டணி அமைந்த பிறகு அவர் முதல்வராக்கப்படாதது குறித்தும் என் மீது கோபம். 2004-ல் சித்தராமையாவை முதல்வராக்க நான் எப்படி பாடுபட்டேன் என்பதை அப்போதைய இடைக்கால காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்திதான் இப்போது அவருக்கு வெளியிட வேண்டும். இவ்வாறு தேவகவுடா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து