ஜெட்லியின் இளமைப் பருவமும் ... அரசியல் பயணமும்...

சனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2019      இந்தியா
jetley journey 2019 08 24

புது டெல்லி : 2009-ம் ஆண்டு எல்.கே. அத்வானியால் அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டவர் அருண் ஜெட்லி. 1952-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி பஞ்சாபி இந்து பிராமண குடும்பத்தில் பிறந்தார் அருண் ஜெட்லி. இவரது தந்தை மகராஜ் கிஷன் ஜெட்லி, தாய் ரத்தன் பிரபா ஆவர்.

இவர் டெல்லியில் 1957-ம் ஆண்டு 1969-ம் ஆண்டு வரை பயின்றார். பொருளியல் இளங்கலை பட்டத்தை 1973-ம் ஆண்டு பெற்றார். பின்னர் 1977-ல் சட்டப் படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்தார். இவர் 1982-ம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரோகன் என்ற மகனும், சோனாலி என்ற மகளும் உள்ளனர்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் 1974-ம் ஆண்டு பா.ஜ.க.வின் மாணவரணி தலைவரானார். 1975-ம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு வரை இந்தியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அச்சமயம் மக்களின் அடிப்படை உரிமைகள் நீக்கப்பட்டன. அருண் ஜெட்லி 19 மாதங்கள் தடுப்பு காவலில் இருந்தார். 1973-ம் ஆண்டு ஊழலுக்கு எதிராக ராஜ் நாராயண் மற்றும் ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆகியோர் தொடங்கிய இயக்கத்தில் முக்கிய தலைவராக திகழ்ந்தார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் அவர் ஜன சங்கத்தில் இணைந்தார்.

வழக்கறிஞர் ஆவதற்கு முன்னர் அருண் ஜெட்லி சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்டாக விரும்பினார். 1987-ம் ஆண்டு முதல் பல்வேறு நீதிமன்றத்தில் ஜூனியர் வழக்கறிஞராக பயிற்சி பெற்றார். 1989-ம் ஆண்டு விபி சிங் ஆட்சியில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும் நியமிக்கப்பட்டார். 1990-ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞரானார்.  பெப்சி மற்றும் கோகோ கோலா ஆகிய நிறுவனங்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடியுள்ளார். சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சராக ஜெட்லி ஆனவுடன் 2002-ம் ஆண்டு பெப்சி நிறுவனத்துக்காக ஜெட்லி, ஒரு வழக்கில் ஆஜராகி வாதாடினார். ஆனால் உச்சநீதிமன்றமோ இமயமலையில் மணாலி- ரோட்டாங் சாலையில் உள்ள பாறைகளில் பெயிண்ட் மூலம் விளம்பரப்படுத்தியதற்கு எச்சரிக்கை விடுத்ததோடு 8 நிறுவனங்களுக்கு அபராதமும் விதித்தது.

2004-ம் ஆண்டு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் கோகோ-கோலா நிறுவனத்துக்காக ஆஜரானார். கடந்த 2009-ம் ஆண்டு எல்.கே. அத்வானியால்அரசியலுக்குக் கொண்டு வரப்பட்ட அருண் ஜெட்லி, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவரானார். அதன் பின்னர் வக்கீல் பணியை நிறுத்திக் கொண்டார். 1991-ம் ஆண்டு பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினரானார். 1999-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். உலக வர்த்தக அமைப்பின் கீழ் முதலீடுகளின் கொள்கையை நடைமுறைப்படுத்த முதல்முறையாக ஒரு புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்டது. 2000-ம் ஆண்டு சட்டத் துறை மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்த ராம் ஜெத்மலானி ராஜினாமா செய்தவுடன் அந்த பொறுப்பு அருண் ஜெட்லிக்கு வழங்கப்பட்டது.

2002-ம் ஆண்டு பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளரான அருண் ஜெட்லி வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சரானார். பின்னர் 2004-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றவுடன் பா.ஜ.க.வின் தேசிய செயலாளரான அருண் ஜெட்லி, மீண்டும் வழக்கறிஞர் பணியில் ஈடுபட்டார். 2009-ம் ஆண்டு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அருண் ஜெட்லி பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா மற்றும் ஜன் லோக்பால் மசோதா ஆகியவற்றை ஆதரித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு அமிர்தசரஸ் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட இவர் காங்கிரஸ் கட்சியின் அமரீந்தர் சிங்கிடம் தோற்றார். இதையடுத்து இவர் குஜராத் மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு அனுப்பப்பட்டார். பின்னர் உத்தர பிரதேசத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு மீண்டும் தேர்வானார். 2014-ம் ஆண்டு மோடி அமைச்சரவையில் நிதி அமைச்சரானார். 2016-ம் ஆண்டு கருப்புப் பணத்தை வெளிக் கொண்டுவர இவர் தானாக முன்வந்து வருமான வரி செலுத்தும் திட்டத்தை கொண்டு வந்தார். இவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. உடல் நிலை பாதிப்பால் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வேண்டாம் என கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பியிருந்தார். பிரதமர் மோடி அவரது வீட்டுக்கே சென்று பேசியும் அவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

கடந்த ஜனவரியில் அவருக்கு தோல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு நியூயார்க்கில் சிகிச்சை பெற்றார். அந்த புற்றுநோய் கட்டி முன் கூட்டியே கண்டுபிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சை அளிக்க அவசியம் ஏற்படவில்லை. இந்த நிலையில் அவர் கடந்த 9-ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லை. அவரது இதயம் மற்றும் நுரையீரலை செயல்படவைப்பதற்கான கருவிகள் பொருத்தப்பட்டன. இந்த நிலையில் அவரது மறைவுச் செய்தி வந்து சேர்ந்துள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து