முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்ரம் லேண்டருடனான தொடர்பை மீட்டெடுக்க முடியவில்லை: இஸ்ரோ

சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : நிலவில் விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை மீட்டமைக்க முடியவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார்.

சந்திரயான் 2 என்ற விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 7-ம் தேதி அதிகாலை நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டரை தரையிறக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நிலவில் இருந்து 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது விக்ரம் லேண்டருக்கும், இஸ்ரோ கட்டுப்பாட்டு அறைக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால், விஞ்ஞானிகளுக்கு நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரை திட்டமிட்டபடி தரை இறக்குவதில் பின்னடைவு ஏற்பட்டது.

இந்நிலையில், நிலவை சுற்றி வரும் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் படம் எடுத்து அனுப்பியதில், நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் விழுந்து சாய்ந்து கிடப்பது தெரியவந்தது. அதனுடன் தொடர்பு கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை. இனி லேண்டருடன் தொடர்பு கொள்வது மிகவும் கடினம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறக்கும் போது மிகுந்த வேகத்துடன் இறக்கப்பட்டதால், அது தரையில் மோதி கவிழ்ந்திருக்கலாம் என்றும் அதன் காரணமாக செயலிழப்பு ஏற்பட்டதாக கருதுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்த நாசா, லேண்டரின் புகைப்படங்களையும் எடுத்து அனுப்பியது.

ஆனால், விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை படம் பிடித்த நாசாவின் எல்.ஆர்.பி ஆர்பிட்டர், போதிய வெளிச்சம் இல்லாததால் அதனை தெளிவாக படம் பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், நிலவில் விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை மீட்டமைக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், சந்திரயான்-2 ஆர்பிட்டர் மிகச்சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. ஆர்பிட்டரில் மொத்தம் 8 கருவிகள உள்ளன. அவை அனைத்தும் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ஆகவே சந்திரயான்-2 ஆர்பிட்டர் திட்டமிட்டபடி அதன் ஆய்வுகளை மேற்கொள்ளும். இஸ்ரோ அடுத்ததாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தில் கவனம் செலுத்தவுள்ளது. எங்களின் அடுத்த முன்னுரிமை ககன்யான் பணிகள் தான் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து