டோனியிடம் ஓய்வு குறித்து தேர்வாளர்கள் பேச வேண்டும்: கவுதம் காம்பீர் கருத்து

வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2019      விளையாட்டு
SPORTS-3 2019 09 27

Source: provided

புது டெல்லி : டோனியிடம் ஓய்வு திட்டம் குறித்து தேர்வாளர்கள் பேச வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் காம்பீர் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்படாததால் விமர்சனத்துக்கு உள்ளான விக்கெட் கீப்பர் டோனி அதன் பிறகு நடந்த வெஸ்ட்இண்டீஸ் தொடர் மற்றும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி தொடரில் இந்திய அணியில் இடம் பெறவில்லை. ராணுவ பயிற்சியில் ஈடுபட்ட டோனி நவம்பர் மாதம் வரை ஓய்வு கேட்டு இருக்கிறார். இதனால் அவர் வங்காள தேசத்துக்கு எதிரான போட்டி தொடரிலும் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் டெல்லியில் ஒரு பேட்டியில் கூறியதாவது:-

ஓய்வு என்பது வீரரின் தனிப்பட்ட முடிவை பொறுத்தது. அதனை அவர் தான் எடுக்க வேண்டும். என்னை பொறுத்தமட்டில் தேர்வாளர்கள் டோனியை சந்தித்து ஓய்வு குறித்து பேச வேண்டும். அவரது வருங்கால திட்டம் என்ன? என்பதை கேட்க வேண்டும். இந்திய அணிக்காக விளையாடும் போது நீங்கள் குறிப்பிட்ட ஒரு சில தொடரை மட்டும் தேர்வு செய்து விளையாடுவது சரியானதாக இருக்காது.

புதிய வீரரான ரிஷாப் பண்ட் மீது தேவைக்கு அதிகமாக கவனம் செலுத்தப்படுகிறது. அவருக்கு 21 வயது தான் ஆகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக தான் அவர் விளையாடி வருகிறார். டெஸ்ட் போட்டியில் 2 சதம் அடித்து இருக்கிறார். அவரை நாம் மற்ற யாருடனும் ஒப்பிடக் கூடாது. இளம் வீரரான அவருக்கு நீண்ட எதிர்காலம் உள்ளது. அவருக்கு அணி நிர்வாகம் சரியான வழியில் ஆதரவு அளிக்க வேண்டும். ரிஷாப் பண்டிடம் அணி நிர்வாகம் பேச வேண்டும். எப்பொழுதும் அவரது ஷாட் தேர்வு சரியாக இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது.

ஷாட் தேர்வு தவறாக அமைந்தால் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவருக்குரிய நாளில் அவர் ஆட்டத்தில் வெற்றியை தேடிக் கொடுப்பார். ஒரு உலக கோப்பை போட்டியில் 5 சதம் அடித்த ரோகித் சர்மாவுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அவர் டெஸ்ட் அணியில் இடம் பெற்றால் கண்டிப்பாக களம் இறக்கப்பட வேண்டும். அவரை போன்ற வீரரை அணியில் வெளியில் வைக்கக் கூடாது.

டெஸ்ட் போட்டியில் நமது நம்பர் ஒன் பவுலரான பும்ரா தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடாதது பெரிய பின்னடைவாகும். அதே நேரத்தில் இது தென்ஆப்பிரிக்க அணிக்கு சாதகமாக அமையும் என்று சொல்ல முடியாது. பும்ரா இல்லாததால் இஷாந்த் ஷர்மா அல்லது முகமது ஷமிக்கு 3 டெஸ்ட் போட்டியிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு காம்பீர் கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து