இலங்கை வீரர் எறிந்த பந்தில் காயமடைந்த ரோஹித் சர்மா முதலாவது டி20 போட்டியில் விளையாடுவாரா?

வெள்ளிக்கிழமை, 1 நவம்பர் 2019      விளையாட்டு
rohit sharma 2019 11 01

புது டெல்லி : வங்கதேசத்துக்கு எதிராக வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கும் முதலாவது டி20 போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், முதலாவது டி20 போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தியா வந்துள்ள வங்கதேசம் அணி 2 டெஸ்ட் போட்டிகளிலும், 3 டி20 போட்டிகளிலும் விளையாட உள்ளது. முதலாவது டி20 போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. இதற்கான தீவிர  பயிற்சியில் வங்கதேச வீரர்களும், இந்திய அணியினரும் ஈடுபட்டு வருகின்றனர். டி20 தொடருக்கு இந்திய அணியில் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்று செயல்படுகிறார். நேற்று வழக்கம் போல் ரோஹித் சர்மா பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். ரோஹித் சர்மாவுக்கு த்ரோடவுன்ஸ் எனப்படும் பந்தை எறிந்து பேட்டிங் பயிற்சி எடுத்தல் முறையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். வங்கதேச அணியில் இடதுகை வேகப்பந்துவீ்ச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் இருப்பதால், அவரின் பந்து வீச்சை சமாளித்து ஆடும் வகையில் இடது கை வசமாக எறியப்பட்ட பந்துகளை எதிர்கொண்டு ரோஹித் சர்மா பயிற்சி எடுத்தார். ரோஹித் சர்மாவுக்கு த்ரோ டவுன் பயிற்சிக்காக இலங்கையின் நுவான் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் பந்தை இடதுகை வசமாக எறிந்த போது, ரோஹித் சர்மாவின் இடது தொடையில் காயம் காயம் ஏற்பட்டது. உடனடியாக தரையில் விழுந்த ரோஹித் சர்மா பயிற்சியை பாதியில் கைவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார். நுவான் எறிந்த பந்து அதிவேகத்தில் வந்ததால், ரோஹி்த் சர்மாவால் பந்தை சமாளித்து விளையாட முடியவில்லை எனத் தெரிகிறது. எதிரணியினரின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க இது போன்ற த்ரோடவுன் பயிற்சிகளை பேட்ஸ்மேன்கள் எடுப்பது வழக்கம். அவ்வாறு ரோஹித் சர்மா எடுத்த போது காயம் அடைந்துள்ளார். பெரும்பாலும் பயிற்சிக்காக தயார் செய்யப்பட்டுள்ள இந்திய ஆடுகளங்கள் நிறைவான தரத்தில் இருக்காது என்பதால் மிகுந்த கவனத்துடன் விளையாடி இருக்க வேண்டும். ரோஹித் சர்மாவுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டாலும், தொடர்ந்து அவரால் பேட்டிங் செய்ய இயலவில்லை என்பதால், அங்கிருந்து புறப்பட்டார். தொடர்ந்து ரோஹித் சர்மாவுக்கு சிகி்ச்சை வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் தகவல்களை வழங்குவோம் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை நடக்கும் முதலாவது டி20 போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்பது சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து