மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

சேலம் : மேட்டூர் அணையில் நேற்று காலை முதல் காவிரியில் 16 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 600 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு உள்ளது
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வந்தது. நேற்று முன்தினம் 6 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 6 ஆயிரத்து 205 கன அடியாக வந்து கொண்டிருந்தது. காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த வாரம் மழை பெய்ததால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு நேற்று முன்தினம் காவிரியில் 5 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாயில் 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வந்தது. இந்தநிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை குறைந்ததால் பாசனத்திற்கு தண்ணீர் தேவை அதிகரித்தது. இதையடுத்து நேற்று காலை முதல் காவிரியில் 16 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 600 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு உள்ளது. இதுவரை அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டதால் மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று காலை வரை 120 அடியாக நீடித்தது. நேற்று காலை முதல் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் இனி வரும் நாட்களில் வேகமாக சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.