ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை நீட்டிப்பு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட வருகிற 22-ந்தேதி வரை தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரை 69,500 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் அப்பாவு 49 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இந்த வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தபால் வாக்குகளை மீண்டும் எண்ணவும், 19, 20 மற்றும் 21-வது சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குகளை மீண்டும் எண்ணவும் உத்தரவிட்டது. அதன்படி கடந்த 4-ந் தேதி ஐகோர்ட்டில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதற்கிடையே மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்ககோரி இன்பதுரை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. ஆனால் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்தது. இந்த தடை நவம்பர் 13-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தடை உத்தரவு நேற்றுடன் முடியும் நிலையில் இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட வருகிற 22-ந் தேதி வரை தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.