முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை: மு,க. ஸ்டாலின் புகாருக்கு தமிழக அரசு பதிலடி

சனிக்கிழமை, 16 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மு.க.ஸ்டாலினின் புகாருக்கு தமிழக அரசு பதிலளித்துள்ளது.
இது குறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் தமிழ்நாடு அரசு புதிய மாவட்டங்களை திட்டமிட்டு பிரித்துள்ளதாகவும் இப்படி பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 50 ஆயிரம் ஓட்டு பெறக்கூடிய ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் இனி 5 ஆயிரம் ஒட்டு பெறக்கூடிய வகையில் பிரித்து ஆளுங்கட்சி தேர்தலை நடத்தப் போகிறதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார். மேலும் தேர்தலை நிறுத்த சொல்லி ஒரு வார்த்தை கூட கூறாமல் உள்ளாட்சித்தேர்தலை நிறுத்துவதற்கும் ஆளும்கட்சி திட்டமிட்டு வருகிறதோ என சந்தேகம் எழுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

2016-ம் ஆண்டில் உள்ளாட்சித்தேர்தலை நடத்துவதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் உள்ளாட்சி வார்டுகளை மறுவரையறை செய்தபின்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு 21-9-2016 ஆம் ஆண்டில் தள்ளுபடி செய்யப்பட்ட பின்னரும் இந்த தீர்ப்பை எதிர்த்தும் மீண்டும் இந்த கோரிக்கையை வலியுறுத்தியும் தி.மு.க. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று வரை நிலுவையில் உள்ளது. எனினும் தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்றுத்தான் தமிழ்நாடு அரசு, 2011-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் உள்ளாட்சி வார்டுகளை மறுவரையறை செய்யும் வகையில் 21 -7-2017 ஆம் ஆண்டில் தனது அறிவிக்கையின் மூலம் எல்லை வரையறை ஆணையத்தை ஏற்படுத்தியது. மேற்படி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் உள்ளாட்சி வார்டுகளின் மறுசீரமைப்பு அறிவிக்கை 2018-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி அரசிதழிலும் வெளியிடப்பட்டது. மேலும் மறுசீரமைக்கப்பட்ட வார்டுகளின் அடிப்படையில் ஆதிதிராவிடர் பழங்குடியினர், மற்றும் பெண்கள் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு மற்றும் மாவட்ட அரசிதழ்களில் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன. 

கடந்த மே மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மறுவரையறை செய்யப்பட்ட உள்ளாட்சி வார்டுகளின் அடிப்படையிலை வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகளை துரிதமாக முடித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோருக்கு ஆய்வு கூட்டங்கள் நடத்தி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் அறிவிக்கை வெளியிடுவதற்கான ஆயத்தப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அரசை குறை சொல்லும் நோக்கில் இது போன்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது மிகவும் வருந்தத்தக்கது. பல்வேறு மாவட்டங்களை பிரிப்பது என்பது அப்பகுதியில் வாழும் மக்களின் நெடுநாளைய கோரிக்கை. அதை ஏற்று செயல்படுத்துவது நிர்வாக நடைமுறையாகும். 2020-ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் பூர்வாங்க பணிகள் தொடங்க இருப்பதால் டிசம்பர் 31-ம் தேதிக்கு பின்னர் எந்த வொரு நிர்வாக அலகையும் புதிதாக ஏற்படுத்தவோ அல்லது அதை குறைக்கவோ இயலாது. எனவே மக்களின் கோரிக்கைக்கு ஏற்பட முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் சட்டசபையில் அறிவிக்கப்பட்ட புதிய மாவட்டங்களை உருவாக்கும் பணியை தமிழ்நாடு அரசு விரைவாக முடித்து அதை நடைமுறைப்படுத்தியுள்ளது.

புதிய மாவட்டங்களை தோற்றுவித்தும் அவற்றின் எல்லைகளை வரையறுத்தும் வெளியிடப்பட்ட அரசாணைகள் பத்தி 7-ல் உள்ளாட்சி வார்டுகளின் மறுசீரமைப்பு பணி முடிவுற்றுள்ளதாலும் சுப்ரீம் கோர்ட் வழக்கில் வழங்கப்பட்ட உத்தரவின்படி ஏற்கனவே தொடங்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் பணிகள் நடைபெற்று வருவதாலும் தற்போது புதிய மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டதாலும் இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட எல்லை வரையறைப்படி நடைபெறும் இந்த தேர்தல் பணிகளை எந்த வகையிலும் பாதிக்காது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எந்த குழப்பமும் இல்லை என தெளிவாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றங்கள் தேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தல் முடிவுற்ற பின்னர் அரசால் அவை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எனவே புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கும் உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படுவதற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. 2018-ம் ஆண்டில் ஏற்கனவே புதிதாக மறுவரையறுக்கப்பட்டு வெளியிடப்பட்ட வார்டுகளின் அடிப்படையிலேயே உள்ளாட்சித்தேர்தல் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் விரைவில் நடத்தமுடிக்கப்படும் என்று தெளிவுப்படுத்திக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து