டென்னிஸ் சாம்பியன்ஷிப்: டொமினிக் திம்மை வீழ்த்தி கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் சாம்பியன்

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2019      விளையாட்டு
Greece player chitchispas champion 2019 11 19

லண்டன் : ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்தது. இதில் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள கிரீஸ் நாட்டு வீரர் ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ், 5-ம் நிலையில் இருந்த ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம்மை சந்தித்தார்.

விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் முதல் செட்டை டைபிரேக்கரில் இழந்த சிட்சிபாஸ், 2-வது செட்டை தனதாக்கியதுடன், 3-வது செட்டை டைபிரேக்கரில் கைப்பற்றினார். 2 மணி 35 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் சிட்சிபாஸ் 6-7 (6-8), 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் டொமினிக் திம்மை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கினார். சாம்பியன் பட்டம் வென்ற சிட்சிபாசுக்கு ரூ.19 கோடி பரிசுத்தொகையுடன் 1,300 தரவரிசை புள்ளியும் கிடைத்தது. 2-வது இடம் பெற்ற டொமினிக் திம் ரூ.9 கோடி பரிசுத்தொகையுடன், 800 தரவரிசை புள்ளியையும் பெற்றார்.

21 வயதான சிட்சிபாஸ் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் 2001-ம் ஆண்டுக்கு பிறகு இந்த போட்டியில் குறைந்த வயதில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றார். அத்துடன் இந்த பட்டத்தை வென்ற முதல் கிரீஸ் நாட்டு வீரர் என்ற சிறப்பையும் தனதாக்கினார். இதற்கு முன்பு 2001-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த லெய்டன் ஹெவிட் தனது 20 வயதில் பட்டம் வென்று சாதனை படைத்து இருந்தார். இந்த போட்டி தொடரில் முதல் செட்டை இழந்த வீரர் ஒருவர் கோப்பையை வெல்வது 2005-ம் ஆண்டுக்கு (அர்ஜென்டினாவின் டேவிட் நல்பாண்டியன்) பிறகு இதுவே முதல்முறையாகும்.

இந்த போட்டி வரலாற்றில் 1988-1991-ம் ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 4 ஆண்டுகளாக (2016-ம் ஆண்டு முதல்) வெவ்வேறு வீரர்கள் முதல்முறையாக கோப்பையை உச்சி முகர்ந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சாம்பியன் பட்டம் வென்ற சிட்சிபாஸ், உலக ஒற்றையர் தரவரிசையில் 6-வது இடத்தில் நீடிக்கிறார். தோல்வி கண்ட டொமினிக் திம் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், செர்பியா வீரர் ஜோகோவிச், சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர். ஆண்டு இறுதியில் நம்பர் ஒன் இடத்தை ரபெல் நடால் தக்க வைத்து இருப்பது இது 5-வது முறையாகும்.

வெற்றிக்கு பிறகு சிட்சிபாஸ் அளித்த பேட்டியில், ‘இந்த வெற்றி அருமையானது. இதனை என்னால் நம்பமுடியவில்லை. எனது உணர்ச்சிகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை. 2-வது செட்டில் சிறப்பாக விளையாடியது எப்படி என்பது எனக்கு புரியவில்லை. ரசிகர்கள் அளித்த ஆதரவு தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். அது எனது சக்தியையும், நம்பிக்கையும் அதிகரிப்பதாக இருந்தது’ என்று தெரிவித்தார்.

தோல்வி அடைந்த டொமினிக் திம் கருத்து தெரிவிக்கையில், ‘டைபிரேக்கரில் நெருக்கமாக வந்த சில பந்துகளை தவற விட்டேன். அதுவே எனது தோல்விக்கு காரணம் என்று நினைக்கிறேன். இந்த போட்டி இருவருக்குமே அருமையானதாகும். இருவருமே வெற்றிக்கு தகுதியானவர்கள் என்று நான் கருதுகிறேன். இருப்பினும் டென்னிஸ் ஆட்டத்தில் ஒருவர் தான் வெற்றியாளராக இருக்க முடியும்’ என்றார்.

17.12.2019 to 14.01.2020 Markali Monthly Rasipalan | 2019 டிசம்பர் மாத ராசிபலன்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து