தமிழகத்தில் இரு கட்டங்களாக நடைபெறும் ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை துவங்குகிறது

புதன்கிழமை, 4 டிசம்பர் 2019      தமிழகம்
Tamilnadu State Election Commission 2019 12 04

சென்னை : தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல்  நாளை 6-ம் தேதி தொடங்குகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக உள்ளாட்சி தேர்தலை அதே மாதம் 17 மற்றும் 19-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கின் காரணமாக உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனால் கடந்த 3 ஆண்டு காலமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தமிழக தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வந்தது. இதையடுத்து கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி ஆகிய ஊராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும். வருகிற 6-ம் தேதி (நாளை) அன்றே மனுத்தாக்கல் தொடங்கும். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி வரும் 13-ம் தேதியாகும். மனுக்கள் மீதான பரிசீலனை வரும் 16-ம் தேதி தொடங்கும். மனுக்களை திரும்ப பெற விரும்புபவர்கள் 18-ம் தேதியன்று பெற்றுக் கொள்ளலாம். தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். ஊரக பகுதிகளில் நடைபெறும் இந்த தேர்தலில் 3 கோடியே 31 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்கு எண்ணிக்கை ஜனவரி மாதம் 2-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும். தேர்தல் நடவடிக்கைகள் ஜனவரி 4-ம் தேதியுடன் முடிவடையும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர்களின் முதல் கூட்டமும், பதவியேற்பு நிகழ்ச்சியும் ஜனவரி மாதம் 6-ம் தேதி நடைபெறும். இந்த தேர்தலில் முதல்கட்டமாக 31,698 வாக்குச்சாவடிகளும், இரண்டாம் கட்டமாக 32,092 வாக்குச்சாவடிகளிலும் என மொத்தம் 63,790 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து