குடியுரிமை மசோதா விவகாரத்தில் வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் பதட்டத்தை தூண்ட முயற்சி செய்கிறது - தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 12 டிசம்பர் 2019      இந்தியா
PM-Modi 2019 09 30

தன்பத் : ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க.  தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி  ஜனவரி 5-ம் தேதியுடன் நிறைவடைகிறது. 81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 30-ம் தேதி தொடங்கி 5 கட்டங்களாக  தேர்தல் நடைபெறும் என்றும், வரும் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். இந்நிலையில், முதல்கட்டமாக 13 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 20 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்தது.

3-வது கட்டமாக 17 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதனிடையே 4-வது கட்ட தேர்தலுக்காக தன்பத் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டார். பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய அவர்,

காங்கிரஸ் அறிக்கையை நம்பி வடகிழக்கு மாநிலங்களின் மக்கள் தவறான வழிக்கு செல்ல வேண்டாம். குடியுரிமை மசோதா விவகாரத்தில் வடகிழக்கு மாநில மக்களிடையே பதட்டத்தை தூண்ட முயற்சி செய்கிறது. அசாம் உள்ளிட்ட மாநிலங்களின் மரபுகள், கலாசாரம், மொழி போன்றவை பாதிக்கப்படாது.அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டத்தை எதிர்கட்சிகள் தூண்டி விடுவதாக பிரதமர் மோடி குற்றம் சாடினார். பாகிஸ்தானில் துன்புறுத்தப்பட்ட அகதிகளுக்கு நிவாரணம் தருவதாக கூறிய காங்கிரஸ் எதையும் செய்யவில்லை. காங்கிரஸ்  அரசு அவர்களை எப்படி நடத்தியதோ, அதே கட்டுப்பாடுகளின் அடிப்படையில் தான் அவர்கள் பாகிஸ்தான்  உள்ளிட்ட நாடுகளில் வாழ்கின்றனர். அவர்களுக்கு நிவாரணம் அளிக்கவே குடியுரிமை திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் பேசிய அவர், மிக நீண்ட காலமாக இருந்து வந்த அயோத்தி பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்படும் என நாங்கள் வாக்குறுதி அளித்தோம். காங்கிரஸ் அதற்கு முட்டுக்கட்டை போட்டது. தற்போது அமைதியான முறையில் தீர்வு காணப்பட்டுள்ளதை நீங்கள் காண்கிறீர்கள். அதே வழியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு திறக்கப்படும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து