திண்டுக்கல் அருகே கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

வெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019      திண்டுக்கல்
13 dglsucide

திண்டுக்கல், - திண்டுக்கல் அருகே கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
திண்டுக்கல் _ மதுரை ரெயில்வே வழித்தடத்தில் கொடைரோடு ரயில் நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளது. இந்த ரயில் நிலையத்தின் 3வது பிளாட்பாரத்தில் நேற்று அதிகாலை 4 பேர் உடல்கள் சிதறிக் கிடந்தது. இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைக்கவே, ரெயில்வே இன்ஸ்பெக்டர் செல்வி, சப் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், சந்திரகுமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தண்டவாளத்தில் இறந்து சிதறிக் கிடந்த 4 பேர் உடல்களையும் மீட்டு அருகில் கிடந்த ஒரு பையையும் எடுத்து சோதனை நடத்தினர். அந்த பைக்குள் அவர்கள் 4 பேரின் அடையாள அட்டைகள் இருந்தது. அதனை வைத்து பார்த்ததில் இறந்தவர்கள் திருச்சியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் தெரிவிக்கையில்,
திருச்சி மாவட்டம் உறையூர் காவிரி நகரைச் சேர்ந்தவர் உத்திரபதி(50). இவரது மனைவி சங்கீதா(43). இவர்களது மகள் அபிநயஸ்ரீ(15), மகன் ஆகாஷ்(12). உத்திரபதி மருந்து உபகரணங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். அபிநயஸ்ரீ 10ம் வகுப்பும், ஆகாஷ் 7ம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர்கள் 4 பேரும் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளனர். திருச்சியில் இருந்து கொடைரோடு ரெயில் நிலையம் வந்து பின்னர் அங்கிருந்து கொடைக்கானல் சென்றனர். அங்கு பல்வேறு சுற்றுலா இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு மீண்டும் கொடைரோடு வந்தனர். அவர்கள் பையில் வேறு எந்த துணிகளும் எடுத்து வரவில்லை. ஊருக்கு செல்வதற்காக கொடைரோடு நிலையம் வந்து பின்னர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் ஏன் இந்த முடிவை எடுத்தனர் என்று தெரியவில்லை. கடன் பிரச்சனையாக இருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது. அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் விசாரித்து வருகிறோம். நான்கு பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு பின் அடக்கம் செய்யப்படும். திருச்சியில் அவர்களது உறவினர்கள் யாரேனும் உள்ளனரா? என்று விசாரித்து வருகிறோம்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து