முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் சிறப்பு பஸ்கள்: முன்பதிவு மையங்களை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 9 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : பொங்கல் பண்டிகைக்கு வெளியூர் செல்லும் பஸ்களுக்கான முன்பதிவு மையங்களை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று துவக்கி வைத்தார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் பொருட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்திட ஏதுவாக  சென்னையில் கோயம்பேடு உள்ளிட்ட 3 இடங்களில் 17 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் சிறப்பு முன்பதிவு மையங்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தரமோகன், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கோ. கணேசன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கு. இளங்கோவன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு நேற்று முதல் 14–ம் தேதி வரையிலான 5 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் 30,120 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, சென்னையிலிருந்து 16,075 பேருந்துகளும், பல்வேறு முக்கிய இடங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 14,045 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பான முறையில் சிரமமின்றி பயணம் செய்திட ஏதுவாக, 60 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த முன்பதிவு வசதியானது அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக www.tnstc.in வலைத்தளத்தோடு கூடுதலாக, www.redbus.in, www.paytm.com, www.busindia.com மற்றும் www.goibibo.com என்ற இணையதளங்களின் வாயிலாக, 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லும் சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ளலாம். பேருந்து இயக்கம் மற்றும் பேருந்து மாற்றம் தொடர்பான செய்தியானது, பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலம் தெரிவிக்கப்படுகிறது. முன்பதிவு வாயிலாக, நாளது வரையில் ஒட்டு மொத்தமாக (புறப்பாடு மற்றும் வருகை) சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு 53,261 பயணிகளும், பிற ஊர்களிலிருந்து முக்கிய ஊர்களுக்கு 77,097 பயணிகளும், ஆகமொத்தம், 1,30,358 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் 6.84 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.

மேலும், கணினி மூலம் உடனடி தள முன்பதிவு (ஆன்லைன் டிக்கெட் ரிசர்வேஷன் சிஸ்டம்) செய்யும் வகையில், பொது மக்களின் வசதிக்காக கோயம்பேடு எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் 15 சிறப்பு முன்பதிவு செயலறைகளும், தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்தில் ஒரு சிறப்பு முன்பதிவு செயலறைகளும், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் ஒரு சிறப்பு முன்பதிவு செயலறையும் என ஆக மொத்தம், 17 சிறப்பு முன்பதிவு செயலறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இச்செயலறைகளில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொது மக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.  கோயம்பேடு  எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் பெண்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர்களுக்கு என தனித்தனியாக சிறப்பு செயலறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பொங்கல் திருநாளை முன்னிட்டு நேற்று முதல் 14–ம் தேதி வரையிலான 5 நாட்களுக்கு வழக்கமாக இயக்கப்படுகின்ற பேருந்துகளும், சிறப்புப் பேருந்துகளும் முறையே கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம், மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களிலிந்து இயக்கப்படும். குறிப்பாக, பொதுமக்களின் வசதிக்காக, கடந்த 3 ஆண்டுகளாக பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைக்காக, தாம்பரம் சானிட்டோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தம் மற்றும் பூவிருந்தவல்லி பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு, பொதுமக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டும் வரும் 12–ம் தேதி முதல் 14–ம் தேதி வரையிலான மூன்று நாட்களுக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறன. பயணிகளின் வசதிக்காக, கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து மேற்கண்ட நான்கு பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 310 இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயங்கிட உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவித்திட ஏதுவாக, 9445014450, 94450 14436 என்ற தொலைபேசி எண்களை (24×7) மணி நேரமும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக, 20 இடங்களில் தகவல் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து