முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பொதுக்கூட்டங்கள் 21 - ம் தேதி முதல் 4 நாட்கள் நடைபெறும் - முதல்வர் இ.பி.எஸ். - துணை முதல்வர் ஓ.பி.எஸ். அறிவிப்பு

திங்கட்கிழமை, 13 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : எம்.ஜி.ஆரின் 103 - வது பிறந்தநாள் விழாவையொட்டி வரும் 21–ந் தேதி முதல் 24 - ந் தேதி வரை 4 நாட்கள் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர். பொதுக்கூட்டங்களில் பேசுவோர் பட்டியலையும் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

இது குறித்து அதி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

அ தி.மு.க. நிறுவனத் தலைவரும், மக்களுக்குத் தொண்டு செய்வதில் தன்னிகரில்லாத சாதனையாளராகத் திகழ்ந்தவருமான சத்துணவு தந்த சரித்திர நாயகர், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 103 - வது பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களையும்;இந்திய நாட்டில் உள்ள மாநிலங்கள் அனைத்தோடும் பல்வேறு பிரிவுகளில் ஒப்பிடும்போது, நல்லாட்சி நடத்துவதில் முதல் இடம் பெற்ற மாநிலமாக மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தமிழ் நாடு அரசாம், கழக அரசின் சாதனைகளை விளக்கவும்; நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் முதலிடமும்; மக்களின் பயன்பாட்டிற்கான உள் கட்டமைப்பு உருவாக்குதலில் முதலிடமும்; பொருளாதார நிர்வாகம், சுற்றுச்சூழல், சுகாதாரம் ஆகியவற்றில் இரண்டாம் இடமும் பெற்றிருக்கும், கழக அரசின் சிறப்புகளை விளக்கிடவும்;நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தலில், அண்ணா தி.மு.க. வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது, தமிழக அரசியலில் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எடுத்துரைத்திடவும்;

ஊரக உள்ளாட்சித் தேர்தலில், அ தி.மு.க.வும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளும் பெற்றிருக்கும் வெற்றி குறித்து விளக்கிடவும், வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி கூறிடவும் பொதுக்கூட்டங்கள் 21.1.2020 செவ்வாய்க் கிழமை முதல் 24.1.2020 – வெள்ளிக் கிழமை வரை நான்கு நாட்கள், தமிழகத்தில் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும்; கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன. அதே போல், 25.1.2020 சனிக் கிழமை அன்று கழக மாணவர் அணியின் சார்பில், கழக அமைப்பு ரீதியான மாவட்டத் தலைநகரங்களில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள்; அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.கழக சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.மாவட்டக் கழகச் செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை, கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் கலைக் குழுவினருடன் தொடர்புகொண்டு பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்படாத மற்ற இடங்களிலும்; புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 17.1.2020 அன்று ஆங்காங்கே டாக்டர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு அல்லது படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூறியுள்ளனர்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அறிவிப்பிற்கிணங்க யார்,யார் எந்த இடங்களில் பேசுகிறார்கள் என்ற பட்டியலை அ தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் டாக்டர் மு. தம்பிதுரை வெளியிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து