5-வது முறையாக தமிழகத்திற்கு கிடைத்த கிருஷி கர்மான் விருதை முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார் அமைச்சர் துரைக்கண்ணு

செவ்வாய்க்கிழமை, 14 ஜனவரி 2020      தமிழகம்
cm greet minister 2020 01 14

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் இரா. துரைக்கண்ணு சந்தித்து, 2.1.2020 அன்று கர்நாடகா மாநிலம், தும்கூரில் நடைபெற்ற விழாவில், 2017-18ஆம் ஆண்டில், தமிழ்நாடுஎண்ணெய் வித்துக்களில் 10.382 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி அடைந்ததற்காக மத்திய அரசின் கிருஷி கர்மான் விருதுக்கு தமிழ்நாடு  ஐந்தாவது முறையாக தேர்வு செய்யப்பட்டு, பாரதப் பிரதமரால் வழங்கப்பட்ட கிருஷி கர்மான் விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார். 

2011-12ஆம் ஆண்டில் அம்மாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாம் பசுமைப் புரட்சி மற்றும் உணவு தானிய இயக்கத்தின் வாயிலாக, உணவு தானிய உற்பத்தியில் தற்போது தமிழகம் இருமடங்கு சாதனை அடைந்துள்ளது. தமிழ்நாடு அரசின் சீரிய திட்டங்களாலும், உற்பத்தித் திறனை அதிகரிக்க வேளாண் துறையால் கடைப்பிடிக்கப்பட்ட புதிய சாகுபடி தொழில் நுட்பங்களாலும், வேளாண் உற்பத்தியில் உள்ள இடைவெளியினை குறைத்து, தமிழ்நாடு 2011-12, 2013-14, 2014-15 மற்றும் 2015-16 ஆகிய வருடங்களில் 100 லட்சம் மெட்ரிக் டன்னிற்கும் அதிகமாக உணவு தானிய உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.  2011-12ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தியில்,  101.52 லட்சம் மெட்ரிக் டன்னும்;  2013-14ஆம் ஆண்டில் பயறுவகை உற்பத்தியில் 6.14 லட்சம் மெட்ரிக் டன்னும்; 2014-15ஆம் ஆண்டில் சிறு தானியங்கள் உற்பத்தியில் 40.79 லட்சம் மெட்ரிக் டன்னும்; 2015-16ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தியில் 113.85 லட்சம் மெட்ரிக் டன்னும் உற்பத்தி செய்து சாதனை படைத்ததற்காக நான்கு முறை மத்திய அரசிடமிருந்து கிருஷி கர்மான் விருதினை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது.  அதேபோன்று, எண்ணெய் வித்துக்களில் 10.382 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி அடைந்ததற்காக 2017-18ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் கிருஷி கர்மான் விருதுக்கு தமிழ்நாடு  தேர்வு செய்யப்பட்டு, 2.1.2020 அன்று கர்நாடகா மாநிலம், தும்கூரில் நடைபெற்ற விழாவில், பிரதமர் தமிழ்நாட்டிற்கு ஐந்தாவது முறையாக கிருஷி கர்மான் விருதையும்,  2 கோடி ரூபாய் ரொக்கப் பரிசையும் வழங்கி கௌரவித்தார். மேலும், அவ்விழாவில் நிலக்கடலை மற்றும் எள்  எண்ணெய் வித்துகளை சாகுபடி செய்யும் விவசாயிகளான கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாப்பாத்தி ஆகியோர் அதிக மகசூல் செய்து சாதனை படைத்ததற்காக தலா 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும்,  சான்றிதழ்களும்  வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.  

இந்த நிகழ்வின்போது, அமைச்சர் டி. ஜெயக்குமார், தலைமைச் செயலாளர்  க. சண்முகம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையர்  எஸ்.ஜே.சிரு, வேளாண்மைத் துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் என்.சுப்பையன், வேளாண்மைப் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் முனைவர் ஆர்.முருகேசன்  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து