ரஜினிகாந்துக்கு கொலை மிரட்டல் -கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சனிக்கிழமை, 25 ஜனவரி 2020      தமிழகம்
Rajinikanth 2020 01 25

Source: provided

சென்னை : ரஜினிகாந்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு கொடுக்கப்பட்டது.   

சென்னை தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலையில் வசிப்பவர் சினோரா பி.எஸ்.அசோக். சென்னை ஐகோர்ட்டு வக்கீலான இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- 

நான் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகனாவேன். கடந்த 22-ந்தேதி அன்று தேனாம்பேட்டை செம்மொழி பூங்காவில் திராவிட விடுதலைக் கழகம் சார்பில் உமாபதி என்பவர் தலைமையில் ரஜினிகாந்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காட்ட கூடியவர்கள் தான். 

அவர்கள் ரஜினிகாந்துக்கு எதிராக கோஷமிட்டனர். அவர்கள் எழுப்பிய கோஷம் பொது மக்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் இருந்தது. மேலும் அவர்கள் அளித்த பேட்டியில் ரஜினிகாந்துக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் கருத்து தெரிவித்தனர். ரஜினிகாந்தை தமிழ்நாட்டில் தெருவில் உயிரோடு நடக்க விட மாட்டோம் என்றும், அவர் கொல்லப்படுவார் என்றும் தெரிவித்தனர். 

இதனால் ரஜினிகாந்தின் உயிருக்கும், அவரது குடும்பத்தாரின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. எனவே குறிப்பிட்ட அந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து