தங்கம் விலை சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது - கவலையில் நடுத்தர வர்க்கத்தினர்

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2020      வர்த்தகம்
gold price 2020 02 24

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.752 உயர்ந்து ரூ.33,328-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு மேலும் ரூ. 94 உயர்ந்து ரூ.4,166-க்கு விற்பனை செய்யப்பட்டது.  சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 90 காசுகள் உயர்ந்து ரூ.53.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை  உயர்வால் நகைக்கடைகளில் 30 சதவீதம் அளவுக்கு விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக  வியாபாரிகள் கூறினர்.

தங்கம் விலை கடந்த ஜனவரி மாதம் முதல் உயர்ந்து  வருகிறது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வந்தது. இந்த அதிர்ச்சியை தாங்குவதற்குள் பிப்ரவரி மாதம் முதல் தங்கம் விலை  மேலும் உயர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் தங்கம் விலை உயர்ந்து புதிய  உச்சத்தை தொட்டு, அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.அதாவது, கடந்த  17-ம் தேதி ஒரு சவரன் ரூ. 31,216-க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து 18-ம் தேதி  ஒரு சவரன் ரூ. 31,408, 19-ம் தேதி ரூ. 31,720, 20-ம் தேதி ரூ. 31,824-க்கும்  விற்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்குவோருக்கு ஒருவித பயத்தை ஏற்படுத்தி வருகிறது. திருமணம் உள்ளிட்ட விசேஷத்திற்காக நகை வாங்க பணத்தை சிறுக, சிறுக சேர்த்து  வைத்திருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு, இந்த விலை ஏற்றம் கூடுதல்  சுமையை ஏற்படுத்தியுள்ளதாக கூறி வருகின்றனர். தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்த போதிலும் இன்னும் விலை உயரத்தான் வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து