எது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2020      அரசியல்
CM Approved Photo 2020 04 05

குறை சொல்வதற்கென்றே உள்ள கட்சி தி.மு.க.தான். தி.மு.க.வினர் நோயில் கூட இன்றைக்கு அரசியல் செய்கின்றனர் என்று முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தமிழக அரசை விமர்சிப்பது குறித்தும், மத்திய அரசு தமிழகத்துக்கு போதுமான நிதி வழங்காதது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி,

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் எவ்வளவு நிவாரணத்தொகை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது? தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலைத் தடுத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு தி.மு.க. தடை போடுகின்றது. மாநில பேரிடர் நிதிக்கு மத்திய அரசு 510 கோடி ரூபாய் வழங்கியிருக்கிறது. தேசிய சுகாதார இயக்கம் 312.64 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறது. தொடர்ந்து மத்திய அரசிடம் கேட்டிருக்கிறோம். தமிழக அரசுக்குத் தேவையான நிதி குறித்து ஏற்கெனவே பிரதமரிடம் காணொலிக் காட்சி ஆலோசனையின்போது வலியுறுத்தியிருந்தோம். தமிழ்நாட்டின் நிலைமையை தெரிவித்து விட்டோம். கொடுக்கின்ற இடத்தில் பிரதமர் இருக்கின்றார். பெறுகின்ற இடத்தில் நாங்கள் இருக்கின்றோம். எங்களின் கடமையை நாங்கள் சரியாகச் செய்திருக்கின்றோம். தி.மு.க.வில் 38 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர். மத்திய அரசிடம் உதவி தேவைப்படும் சூழ்நிலையில் அதனை கேட்கக் கூடிய இடத்தில் இருப்பவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள். அவர்கள் ஏதாவது வலியுறுத்தினார்களா? அரசைக் குறை சொல்கின்றார்களே, இவர்களை நாட்டு மக்கள் எதற்காகத் தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள்? எதையுமே அவர்கள் செய்யவில்லை. குறையை மட்டும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். புயல், சுனாமி என எது வந்தாலும் குறை சொல்லக் கூடிய ஒரே தலைவர் ஸ்டாலின்தான். குறை சொல்வதற்கென்றே உள்ள கட்சி தி.மு.க.தான். நோயில் கூட இன்றைக்கு அரசியல் செய்கின்றனர். வேதனையாக இருக்கிறது. இதற்காக நான் வருத்தப்படுகிறேன். எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட நிலைமை கிடையாது. தமிழகத்தில்தான் இப்படிப்பட்ட நிலைமை இருக்கிறது. இது உயிர் காக்கும் பிரச்சினை. மற்ற கட்சிகள் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் குரல் கொடுக்கின்றனர். இவ்வாறு முதல்வர் எடப்பாடி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து