11 நிறுவனங்களின் வணிக உற்பத்தி துவக்கி வைப்பு: 8 தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் எடப்பாடி அடிக்கல் : 31 ஆயிரத்து 825 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2020      தமிழகம்
Govt-2-Edappadi 2020 07 28

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  27.7.2020 அன்று  தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில், 2,368 கோடி ரூபாய் முதலீட்டில் 24,870 நபர்களுக்கு  புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், புதிதாக நிறுவப்படவுள்ள 8 நிறுவனங்களின் தொழிற் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 

மேலும், 3,185 கோடி ரூபாய் முதலீட்டில் 6,955 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள 11 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியையும் முதல்வர் துவக்கி வைத்தார்.  

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், தொழில் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழச் செய்யவும் அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இதன் காரணமாக, தொழில் முனைவோர்கள் மற்றும் பெரும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழ்நாடு எப்போதும் முன்னிலை வகித்து வருகிறது.  

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, உலக பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டு, படிப்படியாக மீண்டெழுந்து வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில்,  தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை தொடர்ந்து மேம்படுத்திடும் வகையில்,  8 தொழில் திட்டங்களில், 5 திட்டங்களுக்கு நேரடியாகவும், 3 திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாகவும் தமிழக முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது.  

அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில், 1,500 கோடி ரூபாய் முதலீட்டில், 23,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், CapitaLand  நிறுவனத்தால் கட்டப்படும் International Tech Park Chennai, Radial Road  தகவல் தொழில் நுட்ப பூங்கா திட்டம்.  

கடலூர் மாவட்டம், சிப்காட் தொழிற்பூங்காவில்,  350 கோடி ரூபாய் முதலீட்டில், 300 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், TATA Chemicals நிறுவனத்தின் சிலிக்கா உற்பத்தி திட்டம். 

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள மஹிந்திரா ஆரிஜின்ஸ் தொழிற் பூங்காவில், 105 கோடி ரூபாய் முதலீட்டில், 160 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த Nissei Electric நிறுவனத்தின் மின்சார மற்றும் மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம்.  (இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 26.9.2019 அன்று முதல்வர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது),

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள மஹிந்திரா ஆரிஜின்ஸ் தொழிற் பூங்காவில், 100 கோடி ரூபாய் முதலீட்டில், 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த Usui Susira நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம். 

செங்கல்பட்டு மாவட்டம், Mahindra World City தொழிற் பூங்காவில்,  100 கோடி ரூபாய் முதலீட்டில், 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Dinex நிறுவனத்தின் Diesel Engine-களுக்கான Exhaustஉற்பத்தி திட்டம்.  (இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 25.5.2020 அன்று முதல்வர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது).

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 150 கோடி ரூபாய் முதலீட்டில், 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Steel Shoppe நிறுவனத்தின் வாகன தொழிற்சாலைகளுக்கான எஃகு பாகங்கள் உற்பத்தி திட்டம். 

கடலூர் மாவட்டம், சிப்காட் தொழிற்பூங்காவில், 47 கோடி ரூபாய் முதலீட்டில், 550 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில்  MRC Mills நிறுவனத்தின் Textiles processing திட்டம்.

விழுப்புரம் மாவட்டம், கம்பூர் கிராமத்தில், 16 கோடி ரூபாய் முதலீட்டில் 160 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் Sri Raajarajeshwari Life Careநிறுவனத்தின் மருந்து மற்றும் மருத்துவப் பொருட்கள் உற்பத்தி திட்டம். இந்த நிறுவனம் COVID-19 நிவாரண மருந்துப் பொருட்கள்  உற்பத்தியில் ஈடுபடவுள்ளது. 

என மொத்தம் 8 திட்டங்களின் மூலம், தமிழ்நாட்டிற்கு 2,368 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, சுமார் 24,870 நபர்களுக்கு  புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.  

மேலும், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வானூர்தி தொழிற்பூங்காவில், டிட்கோ மற்றும் டைடல் நிறுவனங்களின் கூட்டு முயற்சியால், 250 கோடி ரூபாய் முதலீட்டில் அமையவுள்ள  வானூர்தி உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உயர் கணினி மற்றும் பொறியியல் வடிவமைப்புக்கான AERO HUB உயர்நுட்ப தொழில் மையத்திற்கும் முதல்வர் எடப்பாடி அடிக்கல் நாட்டினார்.  

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 3,185 கோடி ரூபாய் முதலீட்டில், 6,955 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள 11 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியை துவக்கி வைத்தார்.   இந்த 11 திட்டங்களில், 8 திட்டங்கள் நேரடியாகவும், 3 திட்டங்கள் காணொலிக் காட்சி மூலமாகவும் துவக்கி வைக்கப்பட்டது.  அதன்படி,

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள CapitaLand தொழிற் பூங்காவில் 730 கோடி ரூபாய் முதலீட்டில் 875 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த TPI Composites நிறுவனத்தின் Wind blades உற்பத்தி திட்டம். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில்,  608 கோடி ரூபாய் முதலீட்டில் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Glovis Hyundai நிறுவனத்தின் வாகன உதிரி பாகங்கள் Knitting / Packaging திட்டம். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில், 500 கோடி ரூபாய் முதலீட்டில் 2000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த,  Sojitz Motherson நிறுவனத்தின் தொழிற் பூங்கா திட்டம். 

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் 350 கோடி ரூபாய் முதலீட்டில் 625 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 2019-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட Rajapayalam Mills நிறுவனத்தின் Textile fabrics உற்பத்தி திட்டம். 

திருவள்ளூர் மாவட்டத்தில் 220 கோடி ரூபாய் முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Gulf Oil நிறுவனத்தின் Oil lubricants திட்டம். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 80 கோடி ரூபாய் முதலீட்டில் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், JMatadee நிறுவனத்தின், கிடங்கு திட்டம். 

செங்கல்பட்டு மாவட்டத்தில், 75 கோடி ரூபாய் முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Hibrow Healthcare நிறுவனத்தின், மருந்து மற்றும் மருத்துவப் பொருட்கள் உற்பத்தி திட்டம். 

செங்கல்பட்டு மாவட்டம், சிப்காட் சிறுசேரி தொழில் நுட்பப் பூங்காவில் 24 கோடி ரூபாய் முதலீட்டில் 330 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், TCS நிறுவனத்தின் தகவல் தொழில் நுட்ப சேவைகள் (Phase I)திட்டம். 

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் 451 கோடி ரூபாய் முதலீட்டில் 1150 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், Mothi Spinners,Lucky Yarn Tex  மற்றும் Lucky Weavess நிறுவனங்களின் நூல்கள் மற்றும் ஆடைகள்  உற்பத்தி  திட்டங்கள்.  

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள Indospace தொழிற்பூங்காவில், 100 கோடி ரூபாய் முதலீட்டில் 75 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Mahindra Steel Services நிறுவனத்தின் வாகன தொழிற்சாலைகளுக்கான எஃகு பாகங்கள் உற்பத்தி திட்டம். 

காஞ்சிபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில்,   47 கோடி ரூபாய் முதலீட்டில் 950 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Teemage Builders நிறுவனத்தின் கட்டுமான பொருட்கள் உற்பத்தி திட்டம்.  என மொத்தம் 11 திட்டங்களின் மூலம், தமிழ்நாட்டிற்கு 3,185 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, சுமார் 6,955 நபர்களுக்கு  புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். 

தமிழக முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்ட  8 திட்டங்களில், 6 திட்டங்கள், 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்  மேற்கொண்ட திட்டங்கள் ஆகும். அதேபோன்று, வணிக உற்பத்தி துவக்கி வைக்கப்பட்ட 11 திட்டங்களில், 2 திட்டங்கள் 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும், 8 திட்டங்கள் 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்ட திட்டங்கள் ஆகும். 

உலக முதலீட்டாளர்கள் மாநாடு -2019ல், 3 லட்சத்து 501 கோடி ரூபாய் முதலீடுகள் மற்றும் 10.50 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில்,  304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. 27.7.2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள 8 திட்டங்களையும் சேர்த்து, இதுவரை 81 திட்டங்கள், அதாவது 26.64 சதவீத திட்டங்கள், தமது வணிக உற்பத்தியை தொடங்கியுள்ளன.  

மேலும் 191 திட்டங்கள், அதாவது 62.82 சதவீத திட்டங்கள், பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன.  ஆக, மொத்த திட்டங்களில்  89.46 சதவீதம்  (அதாவது 272/304) திட்டங்கள் செயல்பாட்டு நிலையில் உள்ளன.  உலக முதலீட்டாளர்கள் மாநாடு -  2015ல், 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 4,70,065 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.

27.7.2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள 2 திட்டங்களையும் சேர்த்து, 44 திட்டங்கள் நிறைவு பெற்று வணிக உற்பத்தியை தொடங்கியுள்ளன.  27 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன.  ஆக, மொத்த திட்டங்களில், 72 சதவீத திட்டங்கள் (அதாவது 71/98)  செயல்பாட்டு நிலையில் உள்ளன.   

2019-2020ஆம் ஆண்டிற்கான இடைக்கால பங்கு ஈவுத் தொகையாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (டிட்கோ) சார்பில் 37 கோடியே 3 லட்சத்து 3 ஆயிரத்து 205 ரூபாய் மற்றும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (சிப்காட்) சார்பில் 40 கோடி ரூபாய் பங்கு ஈவுத் தொகைக்கான காசோலைகளை தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தமிழக முதல்வரிடம் வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச்செயலாளர் சண்முகம், தொழில் துறை முதன்மைச்செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர். நீரஜ் மித்தல், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் காகர்லா உஷா, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் தலைவர் குமரகுருபரன் மற்றும் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் மருத்துவர் அனீஷ்சேகர், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து