10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 100 சதவீதம் மாணவ,மாணவிகள் தேர்ச்சி

திங்கட்கிழமை, 10 ஆகஸ்ட் 2020      தமிழகம்
School Education 2020 08 01

Source: provided

சென்னை : தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 100 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெறுவதாக இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அசாதாரண சூழல் நிலவியதை தொடர்ந்து, தேர்வு ரத்து செய்யப்பட்டது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத இருந்த மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், வருகைப்பதிவேட்டின் அடிப்படையிலும் மதிப்பெண் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்தது.  

இந்நிலையில் தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.  இதில் 100 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ம் வகுப்பு தேர்வுக்கு பதிவு செய்திருந்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த தேர்வில் மொத்தம் மாணவர்கள் 9,39,829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.  இதில் மாணவர்கள் 4,71,759, மாணவிகள் 4,68,070 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் 6,235 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  தமிழகத்திலேயே அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 52,741 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் சென்று தங்களுடைய மதிப்பெண் விவரங்களை உள்ளிட்டு, தெரிந்துக் கொண்டனர். 

மேலும் மாணவர்கள் தங்களுடைய உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவு எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல்) அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல், மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை நேற்று காலை 10 மணியில் இருந்து பதிவிறக்கம் செய்து, வைத்துக் கொள்ள அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு அளிக்கப்பட்டு இருந்தது.

மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வருகிற 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை செய்து வருகிறது. மதிப்பெண் சார்ந்த குறை இருப்பின் வரும் 17-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை www.dge.tn.gov.in-ல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து