உயர்ரக பசுக்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்: ரூ.1000 கோடியில் கள்ளக்குறிச்சியில் கால்நடைப்பூங்கா அமைக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

திங்கட்கிழமை, 10 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Govt-2-Edappadi 2020 08 02

Source: provided

கள்ளக்குறிச்சி : ரூ. ஆயிரம் கோடியில் கள்ளக்குறிச்சியில் கால்நடை பூங்கா அமைக்கப்படும் என்றும், விவசாயிகளுக்கு உயர் ரக பசுக்கள் வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில் மற்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை கூடி வருகிறது.

கொரோனா தடுப்பு, வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கடந்த சில நாட்களாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெல்லை, திண்டுக்கல், மதுரை போன்ற பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ரூ. 25 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மலைவாழ் உறைவி்ட பள்ளி கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார். அப்போது கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொருத்தவரைக்கும் வைரஸ் பரவல் தடுப்பு சிறப்பான முறையில் நடைபெற்று இன்றைக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. உலக நாடுகளே அச்சத்தில் உறைந்து போய் இருக்கின்ற இந்த தருணத்தில் தமிழகத்திலும் இந்த கொரோனா வைரஸ் பரவி இயல்புநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசு அறிவிக்கின்ற ஆலோசனையை நம் மாவட்ட நிர்வாகம் சிறப்பான முறையில் பின்பற்றி வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியம்.  

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பிரதானமாக கொண்டு உருவாகப்பட்டுள்ளது. இங்கு சட்டத்துறை அமைச்சர் வேண்டுகோளுக்கு இணங்க, ஏழை எளிய மக்களின் நன்மைக்காக மாவட்டம் தோற்றுவிக்கபட்ட ஆறே மாதத்தில் புதிதாக ஒரு மருத்துவக் கல்லூரி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமையவுள்ளது. 

மேலும் ரூ.48 கோடியில் கால்நடை விந்தணு ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட உள்ளது. கால்நடைப் பூங்கா மூலமாக உயர்ரக பசுக்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். கால்நடைப்பூங்கா மூலமாக உயர்ரக பசுக்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். ரூ .1000 கோடியில் கள்ளக்குறிச்சியில் கால்நடைப்பூங்கா அமைக்கப்பட உள்ளது எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

அதனை தொடர்ந்து விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுக்களுடன் முதல்வர் கலந்துரையாடினார். அப்போது பேசிய முதல்வர், ஏரியிலிருந்து கிடைக்கும் வண்டல் மண் விவசாயிகளுக்கே வழங்கப்படுகிறது. 60 சதவீத குடிமராமத்து பணிகள் நிறைவடைந்துள்ளன. தடுப்பணைகள் கட்ட ரூ. 43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  தேசிய மின்னணு வேளாண் சந்தை அமைக்க ரூ. 11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு என்னென்ன வழிகளில் உதவி செய்ய முடியுமோ அதை செய்து வருகிறோம். விவாசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற அ.தி.மு.க. அரசு பாடுபடும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து