கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமித்ஷா

வெள்ளிக்கிழமை, 14 ஆகஸ்ட் 2020      இந்தியா

புதுடெல்லி : கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து விட்டேன் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் பல்வேறு மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் என மக்கள் பிரதிநிதிகளையும் கொரோனா பாதிப்புகள் விட்டு வைக்கவில்லை.  இந்நிலையில், கடந்த 2-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு (வயது 55) கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. 

மத்திய அமைச்சர் அமித்ஷா மத்திய அமைச்சரவையில் கொரோனா பாதிப்புக்கு ஆளான முதல் உறுப்பினர் ஆவார்.  அதன்பின் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர்  தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.  இதனை தொடர்ந்து அமித்ஷா தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். 

கடந்த 9-ம் தேதி கொரோனா பரிசோதனை முடிவில் அமித்ஷா குணமடைந்து விட்டார் என பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி தனது டுவிட்டர் பக்கத்தில்  வெளியிட்டார்.  எனினும் மத்திய உள்துறை அமைச்சகம் இதனை மறுத்ததுடன், அவருக்கு கொரோனா பரிசோதனை எதனையும் நடத்தவில்லை என தெரிவித்தது. 

இந்த நிலையில், அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனது டுவிட்டரில் நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து விட்டேன் என்று தெரிவித்து உள்ளார்.  எனினும் மருத்துவர்கள் வழங்கிய அறிவுரையின்படி சில நாட்கள் அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்வார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து