திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள்: அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே. ராஜூ திறந்து வைத்தனர்

வெள்ளிக்கிழமை, 25 செப்டம்பர் 2020      தமிழகம்
Raju-Sini 2020 09 25

Source: provided

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில் ரூ.1.64 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்கள் மற்றும் பூத்தாம்பட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தின் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையத்தை திறந்து வைத்து, 14,512 பயனாளிகளுக்கு ரூ.103 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ ஆகியோர் வழங்கினர். 

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவுத்துறை செயல்பாடுகள் குறித்து அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி அத்திட்டங்களை அனைத்து கடைக்கோடி மக்களையும் சென்றடையும் வகையில் சிறப்பாக நிர்வாகத்தினை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளார்.

தமிழக அரசு, கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக அனைத்து தரப்பு மக்களுக்கும், குறிப்பாக ஊரக பகுதிகளில் வாழும் மக்களுக்கு பல்வேறு கடன் வசதிகளை அளித்தும், சிறுகுறு விவசாயிகளுக்கு கடன்களை வழங்கியும், நுகர்வோர் மற்றும் பொதுமக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு மகத்தான சேவை புரிந்து வருகிறது.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்க்கடன், உரம், விதை உள்ளிட்ட பல திட்டங்களின் மூலம் வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்க்கைத்தரம் உயர அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தால் திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி நகராட்சி பகுதி, எரியோடு, வேடசந்தூர் வட்டத்தில் இ.சித்தூர் ஆகிய இடங்களில் கூட்டுறவுத்துறையின்

மூலம் செயல்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யும் கூட்டுறவு சில்லரை விற்பனைநிலையங்கள் ஏற்கனவே துவங்கி வைக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அதனையடுத்து, பழனி சரகத்தில் பூத்தாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையம் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் வி.அம்மாபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய அலுவலக கட்டிடம், பெரிய கலையம்புத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய அலுவலக கட்டிடம், திண்டுக்கல் மார்க்கம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய அலுவலக கட்டிடம், சிறுமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நவீனமயமாக்கப்பட்ட புதிய அலுவலக கட்டிடம், நத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நவீனமயமாக்கப்பட்ட அலுவலக கட்டிடம்,  லிங்கவாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நவீனமயமாக்கப்பட்ட அலுவலக கட்டிடம் ஆகியவை  திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் சேவைக்காக 56 வாகனங்கள் ஒப்பந்தம் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 157 நியாய விலை கடைகளுக்குட்பட்ட 28,819 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர். 

பொதுமக்களுக்கு நியாயமான விலையில் தரமான பொருட்கள் கிடைக்க வேண்டுமென்ற உயரிய எண்ணத்தோடு கூட்டுறவுத்துறை ஏழை எளிய மக்களின் தேவையை அறிந்து அத்தியாவசிய தேவையான பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்து, சேவை மனப்பான்மையுடன், லாபம் நோக்கோடு இல்லாமல் விற்பனை செய்து வருகிறது. பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி பயன்பெற வேண்டும். இவ்வாறு அமைச்சர் சீனிவாசன் பேசினார். 

 விழாவில் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசுகையில், தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக உயர்த்திட பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார்.  

தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் 41 பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனைத்தொடர்ந்து 42-வது பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையமாக திண்டுக்கல் மாவட்டம், பூத்தாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம்  துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், 10 பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கும் நிலையங்கள் புதியதாக தமிழகம் முழுவதும் துவக்கப்படவுள்ளன. 

அம்மாவின் ஆட்சியில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டு மகளிர் பொருளாதார மேம்பாட்டைய வழிவகுக்கப்பட்டது. 

கோவிட் -19 சிறப்பு கடனுதவி திட்டத்தின் கீழ், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒரு உறுப்பினருக்கு குறைந்தது ரூ.5,000 அதிகபட்சமாக ஒரு குழுவிற்கு ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. 

நியாயவிலைக் கடைகளுக்கு அருகிலேயே அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் 5 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் 300 வகையான பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் அம்மா சிறு கூட்டுறவுச் சிறப்பங்காடிகள் துவங்க முதல்வரால் உத்தரவிடப்பட்டு நாளது தேதி வரை மாநில அளவில் 813 கடைகளும், திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 51 கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவுத்துறை செயல்பாடுகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன் செல்லூர் கே.ராஜூ ஆகியோர் அனைத்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து