ஜஸ்வந்த் சிங் மறைவு: ஜனாதிபதி-பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 27 செப்டம்பர் 2020      இந்தியா
Ramnath-Modi 2020 09 27

Source: provided

புதுடெல்லி : மூத்த படைவீரரும் சிறந்த பாராளுமன்றவாதியுமான ஜஸ்வந்த் சிங் மறைவு தனக்கு வேதனை அளிப்பதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறி உள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ.க. மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 

மூத்த படைவீரர், சிறந்த பாராளுமன்றவாதி, விதிவிலக்கான தலைவர் மற்றும் அறிவுஜீவியான ஜஸ்வந்த் சிங் மறைவு எனக்கு வேதனை அளிக்கிறது. அவர் பல கடினமான பணிகளையும் எளிதாக மற்றும் சமநிலையுடன் கையாண்டார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் முக்கிய பொறுப்புகளை வசித்தவர் ஜஸ்வந்த் சிங். தேசத்திற்காக விடா முயற்சியுடன் பணியாற்றியவர். அரசியலில் பா.ஜ.க.வை வலுப்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றிய தலைவர். அரசியல் மற்றும் சமூக விவகாரங்களில் தனித்துவமான கண்ணோட்டத்திற்காக அவர் என்றும் நினைவுகூரப்படுவார் என குறிப்பிட்டுள்ளார்.

ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், முன்னாள் மத்திய அமைச்சரான ஜஸ்வந்த் சிங் அறிவுசார்ந்த திறனாலும், நாட்டிற்காக ஆற்றிய சேவையாலும் என்றும் நினைவுகூறத்தக்கவர்.

ராஜஸ்தானில் பா.ஜனதாவை வலுப்படுத்தியதில் மிகப்பெரிய பங்கு வகித்தவர் ஜஸ்வந்த் சிங். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி என்று பதிவிட்டுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து