முக்கிய செய்திகள்

போதைப் பொருள் விவகாரத்தில் கைதான நடிகைகள் சிறையில் மோதல்

Ragini-Sanjana 2020 10 10

Source: provided

பெங்களூரு : போதைப்பொருள் விவகாரத்தில் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகைகள் ராகிணி, சஞ்சனா மோதிக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னட திரை உலகில் விருந்து நிகழ்ச்சிகளில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணியை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது அவர்கள் பரப்பனஅக்ரஹாராவில் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

ஏற்கனவே போலீஸ் விசாரணையில், அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதுடன், போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது.   மேலும் சட்டவிரோதமாக சொத்து சேர்த்தது குறித்து அமலாக்கத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக சிறைக்கு சென்று நடிகைகள் ராகிணி, சஞ்சனாவிடம் 5 நாட்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர். இந்த நிலையில், பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நடிகைகள் 2 பேரும் மோதிக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது பரப்பனஅக்ரஹாரா சிறையில் ஒரே அறையில் நடிகைகள் ராகிணி, சஞ்சனா அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நடிகை ராகிணி காலையில் இருந்து மாலை வரை சக கைதிகளுடன் பேசியபடி இருந்து வருவதாக தெரிகிறது.

இரவு நேரங்களில் தான் அடைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து புத்தகம் படிப்பதை அவர் வழக்கமாக வைத்துள்ளார். குறிப்பாக நள்ளிரவு வரை ராகிணி புத்தகம் படிப்பதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக அதே அறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சனாவால் தூங்க முடியவில்லை என்று தெரிகிறது.  அதாவது நடிகை ராகிணி அறையில் உள்ள மின் விளக்கை அணைக்காமல் புத்தகம் படிப்பதால், சஞ்சனா தூங்க முடியாமல் பரிதவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதே நேரத்தில் நடிகை சஞ்சனா அதிகாலையில் எழுந்து அறையில் மின் விளக்கை எரிய விட்டபடி யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகளை செய்வதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அதிகாலையில் தூங்க விடாமல் சஞ்சனா யோகா பயிற்சி  செய்வதாக நடிகை ராகிணி குற்றம்சாட்டியதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக 2 நடிகைகளும் தினமும் மோதிக் கொள்வதாக கூறப்படுகிறது.

அத்துடன் நள்ளிரவு வரை புத்தகம் படித்து விட்டு தூங்கவிடாமல் செய்வதாக நடிகை ராகிணி மீது சஞ்சனாவும், அதிகாலையில் எழுந்து யோகா பயிற்சி செய்வதால் தன்னால் தூங்க முடியவில்லை என்று சஞ்சனா மீது ராகிணியும் சிறை அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார்கள் கூறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகைகள் 2 பேரையும் சிறை அதிகாரிகள் சமாதானப்படுத்தினாலும், அவர்கள் தினமும் சண்டை போட்டு கொள்வதாக கூறப்படுகிறது.

மேலும் இருவர் இடையே சில நேரங்களில் கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை நிலவுவதாகவும், அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த மோதல் சம்பவத்தால் சக கைதிகள் தொந்தரவை அனுப்பி வருகின்றனர். அதே நேரத்தில் ராகிணி, சஞ்சனாவிடம் அமலாக்கத்துறையினர் 5 நாட்கள் விசாரணை நடத்தி விட்டு சென்ற பிறகு தான், அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. போதைப் பொருள் விவகாரத்தில் நடிகை ராகிணி முதலில் கைதான பின்பு தான் சஞ்சனா கைதாகி இருந்தார்.

இதனால் உன்னால் (ராகிணி) தான், நான் கைதாக நேரிட்டதாக சஞ்சனா கூறுவதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாகவும் 2 நடிகைகளும் சண்டை போட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறையில் நடிகைகள் மோதிக் கொள்ளும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து