முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணியின் போது உயிர்த் தியாகம் செய்த காவலர்களுக்கு நினைவு கல்வெட்டு: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 20 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (20.10.2020) சென்னை, மயிலாப்பூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு காவல்துறையில் பணியின் போதும், கொரோனா தொற்றினாலும் உயிர்த்தியாகம் செய்த வீரக் காவலர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள வீரக்காவலர் நினைவுரு கற்கள் மற்றும் நீருற்றினை திறந்து வைத்தார். மேலும், மரக்கன்றினை நட்டு, காவல்துறை தலைமையகத்தை பார்வையிட்டார். 

காவல் பணியில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து வீரமரணமடைந்த காவல் ஆளினர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் நாள் நாடு முழுவதும் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. 1959-ம் ஆண்டு, அக்டோபர் 21-ம் நாளன்று லடாக் பகுதியில், கடல் மட்டத்திலிருந்து 11,000 அடி உயரத்தில் உள்ள  Hot Springs என்ற இடத்தில் சீன இராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள்  உயிரிழந்தனர். இத்தாக்குதலில் வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை இக்காவலர் நினைவுச் சின்னத்தின் பீடத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறுகிறோம். 

சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும், தேச விரோதிகள் மற்றும் கொடுங் குற்றவாளிகளை கைது செய்ய முயலும் போதும், பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கின்ற பணிகளின் போதும் 1950-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த 151 காவல் ஆளினர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். இந்த ஆண்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் போது, முன்களப் பணியில் ஈடுபட்ட 29 காவல் ஆளினர்கள் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகியும்,  3 காவல் துறையினர் தங்களது கடமைகளைச் செய்யும் போதும் வீர மரணமடைந்துள்ளனர். 

இங்ஙனம் பணியின் போது தங்கள் இன்னுயிரைத் நீத்த 151 தமிழ்நாடு காவல்துறை வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் நினைவுருவக் கற்களில் அவர்களின் திருவுருவம் மற்றும் உயிர்நீத்த விவரங்கள் காவலர் நினைவுச் சின்னத்தின் பீடத்தைச் சுற்றி பதிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் நேற்று தமிழ்நாடு காவல்துறையில் பணியின் போதும், கொரோனா தொற்றினாலும் உயிர்த்தியாகம் செய்த வீரக் காவலர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள வீரக்காவலர் நினைவுரு கற்கள் மற்றும் நீருற்றினை திறந்து வைத்தார்.

அம்மா  21.2.2014 அன்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் ஆலமரக்கன்றினை நட்டு, தமிழகம் முழுவதும் 66 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை துவக்கி வைத்தார். அந்த வகையில், முதல்வர் எடப்பாடி  பழனிசாமி நேற்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றினை நட்டு, காவல்துறை தலைமையகத்தை பார்வையிட்டார். 

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் பெருமக்கள், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ராஜேஷ் தாஸ் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து