ஐதராபாத் : பிரபல நடிகை விஜயசாந்தி பாரதிய ஜனதாவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சமீப காலமாக திரையுலக பிரபலங்கள் பா.ஜ.க.வில் இணைந்து வருகிறார்கள். தென்னிந்திய பிரபல நடிகை குஷ்பு சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாரதீய ஜனதாவில் சேர்ந்தார். அடுத்து பிரபல நடிகை விஜயசாந்தி பா.ஜ.க.வில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
1998-ம் ஆண்டு நடிகை விஜயசாந்தி பா.ஜ.க.வில் இருந்த போது இவருக்கு மகளிர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் பா.ஜ.க.வில் இருந்து விலகி அவர் தனிக்கட்சி தொடங்கினார்.
அந்த கட்சிக்கு மக்களிடம் போதிய ஆதரவு இல்லை. எனவே, 2009-ம் ஆண்டு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் இணைந்தார். அந்த கட்சி சார்பில் மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2011-ல் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
2014-ம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார். 2018-ம் ஆண்டு விஜயசாந்திக்கு காங்கிரசில் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து வழங்கப்பட்டது. அதன் பிறகு காங்கிரசுக்காக உழைக்கப் போவதாக கூறினார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் விஜயசாந்திக்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே, அவர் அந்த கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். அடுத்து மீண்டும் பா.ஜ.க.வில் இணைய திட்டமிட்டுள்ளார். விரைவில் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைவார் என்று தெரியவந்துள்ளது.
இது பற்றி பா.ஜ.க. தேசிய துணைத்தலைவர் டி.கே. அருணா கூறியதாவது:- நடிகை விஜயசாந்தி விரைவில் பா.ஜ.க.வில் இணைகிறார். இது தவிர மேலும் பலர் பா.ஜ.க.வில் இணைய உள்ளனர் என்று அவர் கூறினார்.