ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் விவகாரம்: வேதாந்தா நிறுவன கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது

புதன்கிழமை, 2 டிசம்பர் 2020      இந்தியா
Supreme Court 2020 12 01

Source: provided

புதுடெல்லி : ஸ்டெர்லைட்  ஆலையை இடைக்காலமாக திறக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது. 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடந்ததை தொடர்ந்து, அந்த ஆலையை மூடுமாறு தமிழக அரசு கடந்த 2018-ம் ஆண்டு மே 28-ம் தேதி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், ஆலையை மீண்டும் திறக்க உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஆலையை மீண்டும் திறக்க இடைக்கால தடை விதித்தது. அத்துடன், இந்த வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இல்லை என கூறிய சுப்ரீம் கோர்ட், இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டை அணுகுமாறு வேதாந்தா நிறுவனத்துக்கு அறிவுறுத்தியது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும் வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்று கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி காரணமாக தற்காலிகமாக திறக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட் , வேதாந்த நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து