அவுரங்காபாத் பெயர் மாற்ற விவகாரத்தில் சிவசேனா- காங்கிரஸ் இடையே மோதல்

திங்கட்கிழமை, 18 ஜனவரி 2021      இந்தியா
Shiv-Sena--Cong  2021 01 18

Source: provided

மும்பை : மராட்டியத்தில் கொள்கை மாறுபாடு கொண்ட சிவசேனா மற்றும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி புரிந்து வருகிறது. அடிக்கடி கொள்கை முரண்பாடு காரணமாக சிறு, சிறு உரசல்கள் அவ்வப்போது ஏற்பட்டாலும் ஓராண்டு காலத்தை இந்த ஆட்சி கடந்துள்ளது. 

இந்தநிலையில் மராட்டியத்தில் உள்ள அவுரங்காபாத் நகரின் பெயர் மாற்ற விவகாரம் சிவசேனா- காங்கிரஸ் கட்சிகள் இடையே பூதாகரமாக வெடித்துள்ளது. 

அவுரங்காபாத்தின் பெயரை சாம்பாஜிநகர் என மாற்ற சிவசேனா கடந்த பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. 1995-ம் ஆண்டு சிவசேனா ஆட்சியின் போது அவுரங்காபாத்தை, சாம்பாஜி நகர் என மாற்ற மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி கோர்ட்டில் முறையிட்டதால் பெயரை மாற்ற முடியாமல் போனது. 

இந்தநிலையில் தற்போது அவுரங்காபாத்தின் பெயரை மாற்ற சிவசேனா தீவிரம் காட்டி வருகிறது. இதேபோல அவுரங்காபாத் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் அதன் பெயர் மாற்றப்படும் என பா.ஜனதாவும் கூறியுள்ளது. ஆனால் அவுரங்காபாத்தின் பெயரை மாற்ற மராட்டிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. 

எனினும் காங்கிரசின் எதிர்ப்பையும் மீறி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அவுரங்காபாத்தின் பெயரை சாம்பாஜி நகர் என்றே குறிப்பிட்டு வருகிறார். அவுரங்காபத்தை சாம்பாஜிநகர் என அழைப்பது புதிதல்ல என்றும் அவர் கூறி வருகிறார். 

இந்தநிலையில் அவுரங்காபாத் பெயர் மாற்ற விவகாரம் தொடர்பாக சிவசேனா, காங்கிரஸ் இடையே மீண்டும் மோதல் வலுத்துள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் அதன் நிர்வாக ஆசிரியரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத்தின் கட்டுரை ஒன்று வெளியானது. அதில் அவர் கூறியிருப்பதாவது:- 

காங்கிரஸ் போன்ற மதசார்பற்ற கட்சிகள் அவுரங்காபாத்தின் பெயரை சாம்பாஜிநகர் என மாற்றக்கூடாது என கருதுகின்றனர். இந்த கட்சிகள் அவுரங்காபாத்தின் பெயரை மாற்றினால் அது முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி தங்களது வாக்கு வங்கி பாதிக்கப்படும் என நினைக்கின்றனர். இது அவர்களின் மதச்சார்பின்மையை கேள்வி எழுப்புகிறது. 

முகலாய அரசர் அவுரங்கசீப் மதசார்பற்றவர் கிடையாது. கொடூரமான ஆட்சியாளர். அவரது மதப்பற்று குருட்டுத்தனமாக இருந்தது. மற்ற மதத்தினர் மீது வெறுப்பை காட்டினார். அவர் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியை எதிரியாக நினைத்து அவரது மகன் சாம்பாஜி மகாராஜாவை கொடூரமாக கொன்றார்.

எனவே மராட்டியத்தில் அவுரங்காபாத் என்ற பெயரில் எந்த நகரமும் இருக்க கூடாது. இது மத வெறி அல்ல. அவுரங்கசீப்பை அன்பிற்குரியவராக கருதுவது, மதசார்பின்மை அல்ல. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து