திருவனந்தபுரம் : சிறுத்தை கறி விருந்து சாப்பிட்ட ஐந்து பேரை கேரள வனத்துறையினர் கைது செய்து உள்ளனர்.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முனியாரா வனப்பகுதியில் சிலர் சிறுத்தை ஒன்றை வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதாக மங்குளம் சரக வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வனத்துறையினர் அப்பகுதிக்குச் சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டிலிருந்து 10 கிலோ சமைக்கப்பட்ட சிறுத்தையின் இறைச்சி, தோல், பற்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக வினோத் (45), குரியகோஸ் (74) சி.எஸ். பினு (50), சாலி குஞ்சப்பன் (54) மற்றும் வின்சென்ட் (50) ஆகிய ஐந்து பேரை பிடித்து விசாரித்ததில் சிறுத்தையை பொறி வைத்து பிடித்து, கொன்று சமைத்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து ஐந்து பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.