பாராளுமன்ற தேர்தலின் போதும் கிராம சபை கூட்டம் நடத்தி மக்களிடம் பொய் கருத்துகளை கூறி வெற்றி பெற்றார் ஸ்டாலின் - முதல்வர் எடப்பாடி குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜனவரி 2021      தமிழகம்
Edappadi 2020 11 25

Source: provided

கோவை - மக்களவைத் தேர்தலின் போதும், கிராமசபைக் கூட்டங்கள் நடத்தி, பொய் கருத்துகளை மக்களிடம் பரப்பி மக்களவைத் தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்றார் என்று முதல்வர் எடப்பாடி நேற்று பீளமேடு ரொட்டிக்கடை மைதானத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது குற்றம் சாட்டினார்.

பீளமேடு ரொட்டிக்கடை மைதானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தி, மக்களிடம் கருத்து கேட்கின்றார். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின் போதும், இதேபோல், கிராமசபைக் கூட்டங்கள் நடத்தி, பொய் கருத்துகளை மக்களிடம் பரப்பி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றார்.

அதேபோல், இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பொய் கருத்துகளை மக்களிடம் கூறி வெற்றி பெற ஸ்டாலின் முயற்சிக்கிறார்.  2019-ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் தி.மு.க.வினர் கொடுத்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

எந்த ஆட்சி வந்தால், நாடு வளரும், கோரிக்கைகள் நிறைவேறும் என்பதை எண்ணிப் பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும். நாட்டிலேயே சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ள மாநிலம் தமிழகம். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால், புதிய தொழிற்சாலைகள் தமிழகத்துக்கு வருகின்றன. 2019-ம் ஆண்டு உலகத் தொழில் முதலீட்டாளர் மாநாட்டை தமிழக அரசு நடத்தி ரூ.3 லட்சத்து 5 ஆயிரம் கோடி முதலீட்டை பெற்று 304 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டம் நிறைவேறும் போது, 5 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 5 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.  கொரோனா காலத்திலும் தமிழகத்தில் தொழில் தொடங்க தொழில் நிறுவனங்கள் முன்வந்து ரூ.60 ஆயிரம் கோடி முதலீட்டில் 74 நிறுவனங்கள் தொழில் தொடங்க வந்துள்ளனர். இதன் மூலம் 1.25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கோவை மாவட்டத்துக்கு தேவையான தடையில்லாத மின்சாரத்தை இந்த அரசு வழங்கியுள்ளது.

2006 முதல் 11 வரையிலான தி.மு.க. ஆட்சியில் கடுமையான மின்வெட்டு நிலவியது. இதனால் தொழில் பாதித்தது. பொருளாதாரம் சீரழிந்தது. அந்த நிலையை மாற்றி தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியது அ.தி.மு.க. அரசு. தமிழக அரசின் நிர்வாகம் சிறப்பாக உள்ளது. கல்விமுறையை மேம்படுத்தி, உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கையை 100-க்கு 49 சதவீதம் பேர் உயர்த்தியுள்ளோம்.

தில்லுமுல்லு செய்து வெற்றி

இத்தொகுதி தி.மு.க. உறுப்பினர், கோரிக்கைகள் தொடர்பாக முதல்வரையும், அமைச்சர்களையும் சந்திப்பதில்லை. தொகுதி மக்களையும் சந்திப்பதில்லை. திட்டப்பணியையும் நிறைவேற்றுவதில்லை,. பொய் வாக்குறுதிகளை கூறி, தில்லுமுல்லு செய்து சிங்காநல்லூர் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றி பெற்று எந்த பலனும் இல்லை. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ என்பதால், மக்களின் கோரிக்கைகளை அவர், அரசு கவனத்துக்கு கொண்டு வருவதில்லை என்று பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து