திருப்பதியில் நாளை வெள்ளிக்கிழமை ரதசப்தமி விழா நடக்கிறது. இதையொட்டி அதிகாலையில் இருந்து இரவு வரை 7 வாகனங்களில் மாடவீதிகளில் ஏழுமலையான் வீதிஉலா வருகிறார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வார்கள்.
ரதசப்தமியன்று ஏழுமலையானை வழிபடுவதற்கான தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் தற்போது வழங்கி வருகிறது.
பக்தர்கள் வசதிக்காக தேவஸ்தானம் கடந்த வாரம் 25 ஆயிரம், 300 கட்டண விரைவு தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிட்டது.
இந்நிலையில் திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம், சீனிவாசம், பூதேவி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட இடங்களில் தினசரி 25 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்களை தேவஸ்தானம் வழங்கி வருகிறது. பக்தர்களின் வருகைக்கு தக்கபடி டோக்கன்கள் வரிசையாக வழங்கப்பட்டு வருகின்றன.
அதைத் தொடர்ந்து புதன்கிழமை தான் டோக்கன்கள் வழங்கப்படும். இதை பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே ரதசப்தமி அன்று திருமலைக்கு அனுமதிக்கப்படுவர்.
50 ஆயிரம் பக்தர்களுக்கும் கூடுதலாக ரதசப்தமியை தரிசிக்கும் வகையில் தேவஸ்தானம் ஏற்பாடு செய்து வருகிறது.
ரதசப்தமி வாகன சேவையை காண விரும்பும் பக்தர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.